வெலிகம பகுதியில் கைப்பற்றப்பட்ட 100 கிலோ ஹெரோயின் “ரத்மக விதுர”வுக்கு சொந்தமானதா..?
மாத்தறை - வெலிகம பகுதியில் கைப்பற்றப்பட்ட 100 கிலோ கிராமிற்கும் அதிகளவான ஹெரோயின் போதைப்பொருளுக்கும் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவின் உறுப்பினரான ரத்கம விதுரவுக்கும் தொடர்பு இருப்பதாக காவல்துறை அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
ரத்கம விதுர என்பவர் தற்போது இத்தாலியில் தலைமறைவாகியுள்ளதாக அதன் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.
காவல்துறை அதிரப்படையினரால் நேற்றைய தினம் வெலிகம - தெனிபிட்டிய, பொல்லத்துமோதர பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இந்த போதைப்பொருள் மீட்கப்பட்டது.
111 கிலோ 448 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள், அங்கொடை, தெவிநுவர மற்றும் மிரிஸ்ஸ பகுதிகளை சேர்ந்தவர்கள்.
அவர்களிடமிருந்து மகிழுர்ந்து ஒன்றும் காவல்துறை அதிரப்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் தற்போது காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கடல் மார்க்கமாக இந்த ஹெரோயின் போதைப்பொருள் வெலிகம பகுதிக்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.