சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணை!

சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணை!

சிறைச்சாலைகளில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து நியாயமான விசாரணை ஒன்றினை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கென விசாரணைக் குழுவொன்றை  நியமிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் மறுவாழ்வு ராஜாங்க அமைச்சின் செயலாளர் கீதாமதி கருணாரத்னவுக்கு இதற்கான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொனறாகலை சிறைச்சாலையில் கைதியொருவர் உயிரிழந்தமை, மாத்தறை சிறைச்சாலையில் கைதியொருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை, போகம்பறை சிறைச்சாலையில் கைதியொருவர் தப்பிச் சென்றமை மற்றும் உயிரிழந்தமை, வெலிக்கடை மற்றும் மெகஸின் சிறைச்சாலைகளில் கைதிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியமை உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து இந்த குழுவினால் சுயாதீன விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன் இந்த விசாரணை குறித்த அறிக்கையினை 3 வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு இராஜாங்க அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும் இந்த சம்பவங்கள் தொடர்பில் நியாயமான விசாரணை நடத்தி யாரேனும் தவறிழைத்திருந்தால் அது குறித்து சட்டம் மற்றும் ஒழுங்கு அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் சிறைச்சாலைகளுக்குள் கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டமை தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

அத்துடன் சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும்  அவர் அறிவுறுத்தியுள்ளார்.