சமைக்கப்படாத மீனை பச்சையாக உண்பது மனித உடலுக்கு தீங்கு : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

சமைக்கப்படாத மீனை பச்சையாக உண்பது மனித உடலுக்கு தீங்கு : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

சமைக்கப்படாத மீனை பச்சையாக உண்பது மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெத ஆராச்சி சமைக்கப்படாத மீனை பச்சையாக உட்கொண்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் கருத்துரைத்த போதே அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

மீன்கள் புதிய அல்லது உப்பு நீரில் இருந்தாலும் அவற்றின் உடலிலும் கிருமிகள் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவ்வாறான கிருமிகள் மனித உடலுக்கு நல்லதல்ல எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக சமைக்கப்படாத மீனை பச்சையாக உண்ண பரிந்துரைக்க முடியாது எனவும் இது சிறுவர்களுக்கு தவறான முன்னுதாரணமாக அமையும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் நோக்கம் தவறானது என அடையாளப்படுத்த முடியாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகவே கொரோனா வைரஸ் பரவும் என்ற அச்சத்தினால் மீன்களை உண்ண பயம்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் மீன்களை கழுவி நன்கு சமைத்து உண்பது எந்த விதத்திலும் தீங்கு விளைவிக்காது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.