பாடசாலை மூன்றாம் தவணை கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பது குறித்த அறிவிப்பு இன்று..!

பாடசாலை மூன்றாம் தவணை கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பது குறித்த அறிவிப்பு இன்று..!

கொவிட் 19 தொற்றினால் நாட்டில் நேற்றைய தினம் 3 மரணங்கள் பதிவாகின.

இதன்படி, கொவிட் - 19 தொற்றினால் நாட்டில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கந்தானை பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஆண் ஒருவர் தனது வீட்டிலேயே உயிரிழந்தார்.

நீரிழிவு நோயுடன் கொவிட் -19 தொற்றுறுதியானமையே மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், கொழும்பு 12 சேர்ந்த 74 வயதுடைய பெண் ஒருவரும் மரணித்தார்.

அவர் கொவிட்-19 தொற்றுறுதியானவர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து, ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணித்துள்ளார்.

உயர் குருதி அழுத்தம், நீரிழிவு மற்றும் கொவிட் 19 - தொற்றால் நுரையீரல் பலவீனமடைந்தமையே இந்த மரணத்திற்கான காரணம் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான ஆண் ஒருவரும் கொவிட்-19 தொற்றால் மரணமானார்.

அவர் தனது வீட்டில் வைத்தே உயிரிழந்துள்ளார்.

நீரிழிவு மற்றும் கொவிட்-19 தொற்றே இந்த மரணத்திற்கு காரணம் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் ஓக்டோபர் மாதம் 22 ஆம் திகதி வரையில் 13 கொவிட் 19 மரணங்களே பதிவாகியிருந்தன.

எனினும் கடந்த 28 நாட்களில் கொவிட்-19 தொற்றால் 56 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதேவேளை நாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 325 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்கள் அனைவரும் நோயாளர்களுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய திவுலபிட்டி மற்றும் பேலியகொடை இரட்டைக் கொத்தணிகளில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 893 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆயிரத்து 402 ஆக அதிகரித்துள்ளது.

வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெறுபவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 746 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் 377 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதன்படி, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 587 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பாடசாலை மூன்றாம் தவணை கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பிலான அறிவிப்பு இன்றையதினம் வெளியிடவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை மூன்றாம் தவணை கற்றல் செயற்பாடுகளை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்க முன்னதாக தீர்மானிக்கப்பட்டது.

எனினும் அன்றைய தினம் சில வகுப்புகளுக்கான கற்றல் செயற்பாடுகளை மாத்திரம் ஆரம்பிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதாக கல்வியமைச்சின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் நேற்றைய தினம் பல முக்கிய கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு, தீர்மானித்து இன்றைய தினம் அறிவிக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.