
மனிதர்கள் யானைகளுக்கு இடையேயான பிரச்சினைகளுக்கு எப்போது தீர்வு..?
யானை மற்றும் மனிதர்களுக்கு இடையிலான பிரச்சினைகள் தற்போது அதிகளவில் பதிவாகி வருகின்றன.
இதன் காரணமாக மரணிக்கும் யானைகள் மற்றும் மனிதர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் சில பகுதிகளில் மூன்று யானைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதோடு யானைத் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.
பொலன்னறுவை - மெதிரிகிரிய மற்றும் கிரிதல பகுதியில் காட்டு யானைகளின் தாக்கம் அதிகரித்துள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
நேற்றிரவு கிரிதல பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றை காட்டு யானை சேதப்படுத்தியுள்ளது.
அத்துடன் மெதிரிகிரிய - அமப்கஸ்வௌ பகுதியில் தென்னை உள்ளிட் பயிர்களுக்கு சேதம் விளைவித்துள்ளதோடு உயிர் ஆபத்துகள் காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை வெல்லவாய - கெமுனுபுர பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்கான 62 வயதான ஒருவர் உயிரிழந்தார்.
தமது விவசாய நடவடிக்கைகளை நிறைவு செய்து மீண்டும் வீடு திரும்பிய நிலையில் அவர் யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
அத்துடன், வவுனியா - செட்டடிக்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் யானை ஒன்றின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
7 வயது மதிக்கத்தக்க குறித்த யானையின் உடலில் விசம் பரவி உயிரிழந்திருக்கலாம் என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் பொலனறுவை - கல்லெல்ல வனப்பகுதியில் உயிரிழந்த யானை ஒன்றின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த யானை துப்பாக்கி பிரயோகம் நடத்தி கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,
இதேவேளை புத்தல பகுதியில் யானை ஒன்றின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட யானை 12 முதல் 15 வயதுக்கு இடைப்பட்டது என பிரேத பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.