ஊடகங்கள் மற்றும் மக்கள் மீது ஜனாதிபதி கோட்டாபய முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

ஊடகங்கள் மற்றும் மக்கள் மீது ஜனாதிபதி கோட்டாபய முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

ஊடகங்களும் மக்களும் அக்கறையற்று செயற்பட்டதாலேயே நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஏற்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் கோவிட்-19 ஒழிப்பு ஜனாதிபதி செயலணியை சந்தித்தபோது ஜனாதிபதி இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவித்தபோது, கொரோனா வைரஸ் என்பது சுகாதார அச்சுறுத்தலாகும். அதில் மக்களை பாதுகாப்பாக வழிநடத்துவது அரசின் பொறுப்பு. இந்த நாட்டு சுகாதாரக் கட்டமைப்புக்கு அதனை சிறப்பாக கையாள முடியும் என நம்புவதாக ஜனாதிபதி கூறினார்.

மிக சுலபமான விடயம் நாட்டை முடக்குவதாகும். ஆனாலும் மக்களின் அன்றாட ஜீவனோபாயம் பாதிக்கப்படும் என்பதால் அதனை செய்யவில்லை. முதலில் சிறப்பாக கொரோனா வைரஸினை ஒழித்துக்கட்டினோம்.

தொற்றுநோய் பரவுவதை எதிர்கொள்வதில் எங்களுக்கு 3 தெரிவுகள் உள்ளன. முதலாவது ஊரடங்கு உத்தரவு விதித்து முழு நாட்டையும் முடக்குவது. இரண்டாவது எதுவும் செய்யக்கூடாது. நோயைக் கட்டுப்படுத்தும் போது எங்கள் இயல்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது மூன்றாவது தெரிவாகும், நாங்கள் அதைத்தான் தேர்ந்தெடுத்தோம்.

எங்கள் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் முதல் கட்டத்தில் கோவிட் தொற்றை கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்க முடிந்தது. எனவே, தீவிர சிகிச்சை ள் தேவைப்படவில்லை. நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கும் தொற்றுநோயைத் தடுப்பதற்கும் மக்கள் தங்கள் ஆதரவை வழங்க வேண்டும். பொது மக்களுக்கு பின்பற்றப்பட வேண்டிய சுகாதார வழிகாட்டுதல்களை தொடர்புகொள்வதற்கு ஊடகங்களே பொறுப்பு மற்றும் கடமை உள்ளது.

எனினும் ஊடகங்களும் மக்களும் தங்களது கடமையை சரிவர செய்யவில்லை. இதனால் இன்னுமொரு சவால் ஏற்பட்டுவிட்டது. 40 நாட்கள் தொடர்ச்சியாக மூடப்பட்ட பகுதியிலிருந்தும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆகவே நாட்டை மூடுவது தீர்வாக அமையாது என ஜனாதிபதி குறிப்பிட்டார்.