பி.சி.ஆர் பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்தைக் கடந்தது!
நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்தைக் கடந்துள்ளது.
நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட 10 ஆயிரத்து 632 PCR பரிசோதனைகளுடன் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 6 இலட்சத்து 2 ஆயிரத்து 850 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை, பேலியகொடை மற்றும் மினுவாங்கொடை கொரோனா கொத்தணிகளில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 451 ஆக காணப்படுகிறது.
நேற்றையதினம் பேலியகொட கொத்தணியில் மேலும் 510 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டில் இரண்டாம் அலை ஏற்பட்டு ஒருமாதம் கடந்துள்ள நிலையில், இந்த 10 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், குறித்த கொரோனா தொற்றாளர்களில் ஆயிரத்து 41 பேர் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் எனவும், ஆயிரத்து 7 பேர் பேலியகொடை மீன்சந்தை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏனைய 8 ஆயிரத்து 403 பேரும் பேலியகொடை மற்றும் மினுவாங்கொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என, கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்று காரணமாக 35 ஆவது உயிரிழப்பு நேற்றைய தினம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
78 வயதான குறித்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், பிரேத பரிசோதனைகளின் மூலம், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா தொற்றுடன் ஏற்பட்ட மாரடைப்பே குறித்த நபர் உயிரிழப்பதற்கு காரணமென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 285 ஆக காணப்படுகிறது.
அத்துடன், மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் தொற்றுக்கு உள்ளான 412 பேரும், அவர்களுடன் தொடர்புடைய 3 ஆயிரத்து 887 பேரும் முழுமையாக குணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 5 ஆயிரத்து 609 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 297 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதேவேளை, முப்படையினரால் நடாத்திசெல்லப்படும் 27 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 2 ஆயிரத்து 409 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்படி, நாட்டில் இதுவரை 63 ஆயிரத்து 921 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.