தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் காவற்துறையினர் விசேட கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்...!

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் காவற்துறையினர் விசேட கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்...!

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பகுதிகளில் காவற்துறையினர் விசேட கண்காணிப்பு பணிகளில் தொடர்ந்தும் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மேல் மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டது.

எனினும், கொவிட் 19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.

அவ்வாறான பகுதிக்குள் எவரும் நுழையவோ, வெளியேறவோ அனுமதியில்லை என காவற்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்

இதற்கமைய, அந்த பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்கு காவற்துறையினர் தொடர்ந்தும் கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தும் போது, சமூக இடைவெளி மற்றும் சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகும் என காவற்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று அதிகாலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 91 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, இதுவரை ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 923 ஆக அதிகரித்துள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலான காலப்பகுதியில் இருந்து இதுவரையில் 437 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

அதேநேரம், தனிமைப்படுத்தல் சட்டம் அடங்கிய வர்த்தமானி வெளியிடப்பட்ட தினம் முதல் இன்றைய தினம் வரையான காலப்பகுதியில் அதனை மீறிய குற்றச்சாட்டில் 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.