பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என காமினி லொக்குகே தெரிவிக்கின்றார்...!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு இன்று அதிகாலை 05 மணியுடன் நீக்கப்பட்டுள்ள போதிலும் நாளாந்த நடவடிக்கைகள் வழமையை போன்று இடம்பெறவில்லை.
பயணிகள் போக்குவரத்து இன்று முற்பகல் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் மிகவும் குறைந்த அளவிலான மக்களே பொது போக்குவரத்தினை பயன்படுத்தியிருந்தனர்
எனினும் பல பகுதிகளில் சுகாதார பாதுகாப்பு முறைமையை பின்பற்றி மக்கள் பொது போக்குவரத்தில் ஈடுபடவில்லை.
மேலும் பொது போக்குவரத்துக்கள் குறைந்தளவிலேயே இடம்பெற்றதாகவும், அலுவலக புகையிரத சேவைகளுக்காக 48 புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பயணிகள் எண்ணிக்கை குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றமையினால் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக பயணிகள் பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தெரிவிக்கின்றனர்.
குறைந்த எண்ணிக்கையிலான பயணிகள் மாத்திரமே பொது போக்குவரத்தில் ஈடுபடுகின்றமையினால் பேருந்து கட்டணத்தை அதிகரிக்கப்போவதாக பேருந்து உரிமையாளர்களின் சங்கங்கள் அறிவித்த போதிலும் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாட்டாது என போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.