ஊரடங்கு சட்டம் குறித்த முழுமையான விபரம்..!
மேல் மாகாணம் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று காலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது.
இருப்பினும், குறிப்பிட்ட சில மாவட்டங்களில் உள்ள சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் 25 பொலிஸ் பிரிவுகள் மற்றும் ஏனைய இரு பகுதிகள் ஆகியன இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் மட்டக்குளி, முகத்துவாரம், புளுமெண்டல், கொட்டாஞ்சேனை, கிரேண்ட்பாஸ், கரையோர பொலிஸ் பிரிவு, ஆட்டுப்பட்டித்தெரு, மாளிகாவத்தை, தெமட்டகொடை, வெல்லம்பிட்டி, வாழைத்தோட்டம் மற்றும் பொரளை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், கம்பஹா மாவட்டத்தின் வத்தளை, பேலியகொடை, கடவத்தை, ராகம, நீர்கொழும்பு, பமுனுகம, ஜா-எல மற்றும் சபுகஸ்கந்த ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், களுத்துறை மாவட்டத்தின், ஹொரணை, இங்கிரிய ஆகிய பொலிஸ் பிரிவுகள் மற்றும் வேக்கட மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், குருநாகலை மாவட்டத்தின் குருநாகலை மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் குலியாபிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று, கேகாலை மாவட்டத்திற்கு உட்பட்ட மாவனெல்ல மற்றும் ருவன்வெல்ல ஆகிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, சில வீடமைப்புத் திட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகள் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவும் சாத்தியம் அதிகம் உள்ள இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய, மெத்சந்த செவன, மிஹிஜய செவன, மோதர ரன்மிண செவன, தெமட்டகொட சிரிசந்த உயன மற்றும் மாளிகாவத்தை NHS வீடமைப்புத் திட்டம் ஆகிய வீடமைப்புத் திட்டங்களில் வசிப்பவர்கள் வீடுகளுக்கிடையில் பிரவேசிப்பதை தவிர்க்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய சேவைகளை வழமைபோன்று முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா மேலும் குறிப்பிட்டார்.