அரசாங்கத்திடமிருந்து நிவாரணம் கோரும் கடற்தொழில் தொழில் சங்கங்கள்
வாழ்வாதாரம் அற்ற நிலையில் தற்போது உள்ள கடற்தொழில் சமூகத்திற்கு உரிய நிவாரணம் வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அல்லது கடற்தொழிலாளர்கள் பிடிக்கும் மீனை விற்பனை செய்வதற்கு சில மணி நேரத்திற்கு ஏனும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என கடற்தொழில் தொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் கோரியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று இந்த வருட ஆரம்பத்தில் இலங்கையை தாக்கியது முதல் கடற்தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக பேலியகொடை மீன் விற்பனை நிலையத்தில் வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் பலர் இனம் காணப்பட்ட நிலையில், கடற்தொழிலாளர்களின் நிலை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை கடற்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் அருண பெர்ணாண்டோ கவலை வெளியிட்டுள்ளார்.
பிடிக்கப்படும் மீன்களின் விலை பாரிய அளவில் குறைந்துள்ளது.
எரிபொருளின் விலைகளில் எந்த விதமான விலைக்குறைப்பும் இல்லாதமையினால், கடலுக்கு சென்று மீன்பிடிப்பதனால் லாபத்தை பெறுவதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.