டெங்கு நோயாளரையும் விட்டு வைக்காத கொரோனா தொற்று- முழுமையான விபரங்கள்
டெங்கு நோயும் கொரோனா தொற்றும் உறுதிசெய்யப்பட்ட நோயாளி ஒருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த 2ம் திகதி சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு முதலில் டெங்கு நோய் பீடிக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது.
அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொவிட்-19 தொற்றும் இருக்கின்றமை உறுதி செய்யப்பட்டது.
29 வயதான அவர் தற்போது ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவருடன் நீர்கொழும்பு வைத்தியசாலையில் தங்கி இருந்த ஏனைய நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளில் யாருக்கும் கொவிட்-19 தொற்று இருக்கவில்லை என தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில் இன்று ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.
இதற்கமைய கிழக்கு மாகாணத்தில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளதாக எமது செய்தி பிரிவிற்கு அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 562 பேர் இன்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதற்கமைய குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 2285 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அதேநேரம் 5 ஆயிரத்து 100 கொவிட் 19 நோயாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, 6 ஆயிரத்திற்கும் குறைந்தளவான சேவையாளர்கள் பணியாற்றும் ஹொரனை பொடி லைன் தொழிற்சாலையின் நாளாந்தம் கொவிட் 19 தொற்றுறுதியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அரச மருத்து அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் செயலாளர் ஹரித்த அலுத்கே இதனை தெரிவித்துள்ளார்.
எனினும், அங்கு மேற்கொள்ளப்படும் பீ.சி.ஆர் பரிசோதனைகள் தொடர்பில் திருப்தி கொள்ள முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாளாந்தம் அந்த ஆடை தொழிற்சாலை கொத்தணியுடன் தொடர்பு கொண்டவர்கள் பதிவாகின்றனர்.
அந்த ஆடை தொழிற்சாலையில் பணியாற்றும் 50 சதவீதமானவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனினும் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைக்கான அறிக்கைகளே தற்சமயம் கிடைக்கப்பெறுகின்றன.
தாமதமான அறிக்கைகளை வைத்தே ஹொரணை மற்றும் அதனை அண்மித்துள்ள இங்கிரிய போன்ற பகுதிகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.
தாமதமான தரவுகளை கொண்டு நாடு தொடர்பில் எவ்வாறு முடிவுகளை மேற்கொள்வது என மருத்துவர் ஹரித்த அலுத்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
எனினும் தமது ஆடை தொழிற்சாலையில் பணியாளர்களுக்காக விரிவான பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக அந்த ஆடை தொழிற்சாலையின் உரிமை நிறுவனமான மாஸ் ஹோல்டின்ங்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
ஹொரணையில் உள்ள தமது தொழிற்சாலையில்; 68 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதுடன் அகலவத்தையில் உள்ள தொழிற்சாலையில் ஒருவருக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, சமூக இடைவெளி பேணாத மற்றும் முககவசம் அணியாதவர்களை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.
காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த நடைமுறைகளை பின்பற்றாமை தொடர்பில் கடந்த 8 நாட்களில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த சோதனை நடவடிக்கைகளை விரிவுப்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தனிமைப்படுத்தல் பகுதிகளில் கண்காணிப்புக்காக சிவில் ஆடையில் காவல்துறையினரை ஈடுபடுத்தவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்டுள்ள தரப்பினருடன் முறுகலில் ஈடுபட்ட 4 குடும்பங்களை சேர்ந்த 5 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள தரப்பினர் தங்கியுள்ள வீட்டுக்கு அருகில் வசிக்கும் சிலர் விளையாடியுள்ள நிலையில், அது தொடர்பில் வீட்டில் உள்ளவர்களால் அந்த பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்த வீட்டில் உள்ளவர்களுடன் கோபமடைந்த குறித்த தரப்பினர், தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களுடன் முறுகலில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தீபாவளி பண்டிகை நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் ஹட்டன் நகரில் நுகர்வோரின் வருகையை கட்டுப்படுத்தும் வகையில் அட்டன் டிக்கோயா நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் கடைகளை மூடுவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், அட்டன் நகரிற்கு பொருள் கொள்வனவிற்காக இன்று வருகைத்தந்த நுகர்வோரில் சிலர் சுகாதார நடைமுறைகளை பேணவில்லை என எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
அவர்களுக்கு காவல்துறையினரும், பொது சுகாதார பரிசோதர்களும் கடும் எச்சரிக்கையை விடுத்து கொவிட்-19 சுகாதார ஆலோசனையை வழங்கியதாகவும் செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.