756 டெங்கு நோயாளர்கள் அடையாளம்: தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு!
நாட்டில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 756 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் 11 ஆயிரத்து 573 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருற்தனர்.
இதன் அடிப்படையில் கடந்த மாதம் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் கடந்த பத்து மாதங்களில் நாட்டில் 28 ஆயிரத்து 654 டெங்கு நோயாளர்கள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு முழுவதுமான காலப்பகுதியில் 1 இலட்சத்து 5 ஆயிரத்து 49 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்ததாகவும், தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் 11 ஆயிரத்து 608 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அதிக அளவான டெங்கு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட சந்தர்ப்பம் இதுவாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.