அமெரிக்காவின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனுக்கும், துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிசுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 290 வாக்குகளைப் பெற்று 46-வது அதிபராக பதவியேற்க உள்ளார். இதேபோல், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை
அதிபராகிறார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடனுக்கும், துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிசுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், உங்களின் சிறப்பான வெற்றிக்கு வாழ்த்துக்கள் ஜோ பைடன். நீங்கள் துணை அதிபராக பதவி வகித்தபோது இந்திய – அமெரிக்க உறவை வலுப்படுத்துவதற்கு நீங்கள் ஆற்றிய பங்களிப்பு முக்கியமானது மற்றும் மதிப்பற்றது.
மேலும், இந்திய – அமெரிக்க உறவை புதிய உயரங்களுக்கு இட்டுச்செல்ல மீண்டும் ஒருமுறை உங்களுடன் இணைந்து செயலாற்றுவதை நான் எதிர்நோக்கி உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.
இதேபோல், துணை அதிபராக தேர்வான கமலா ஹாரிசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உங்கள் வெற்றி மகத்தானது. உங்கள் உறவினர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த அமெரிக்கவாழ் இந்தியர்களுக்கும் மட்டற்ற பெருமை தரக்கூடியது. உங்களின் ஆதரவு மற்றும் தலைமையின் உதவியுடன் துடிப்புமிகு இந்திய – அமெரிக்க உறவு இன்னும் வலுவடையும் என்று நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.