
மட்டக்களப்பில் தற்போதைய கொரோனா நிலவரம் - சுகாதார பணிப்பாளரின் அறிவிப்பு
மட்டக்களப்பு நகரில் மேலும் இருவருக்கும், ஏறாவூரில் மேலும் 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் தொற்றாளர் தொகை அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இனங்காணப்பட்ட இருவரும் நேற்றைய தினம் இனங்காணப்பட்ட குடும்பத்தின் உறவினர்கள் என சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
இவர்கள் கொழும்பு சென்று வந்துள்ளதாகவும், இவர்களிடம் இருந்து ஏனையவர்களுக்குத் தொற்று பரவியதா என்பது தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
இன்று இனங்காணப்பட்ட ஆறு பேருடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தொகை 56 ஆக அதிகரித்துள்ளதுடன் கிழக்கு மாகாணத்தில் 100 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றினை தடுக்கும் வகையில் சுகாதார பிரிவினர் விடுக்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் சுகாதார பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் தற்போதைக்கு காத்தான் குடி ஆதார வைத்தியசாலை, ஈச்சிலம்பற்று ஆதார வைத்தியசாலை, கரடியனாறு வைத்தியசாலை, பாலமுனை வைத்தியசாலை, பதியத்தலாவ வைத்தியசாலை என ஐந்து வைத்தியசாலைகள் கொரோனா தொற்றுள்ளவர்களைப் பராமரிக்கின்ற வைத்தியசாலையாகக் காணப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுள்ள அனைவரும் கிழக்கு மாகாணத்திற்குள்ளேயே பராமரிக்கக்கூடிய நிலை காணப்படுவதையிட்டு ஓரளவு திருப்தியடைவதாகக் கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், சில மாகாணங்களில் தொற்றுள்ளவர்கள் வேறு மாகாணங்களுக்கு அனுப்பும் நிலையிருக்கின்றது.
ஆனால் கிழக்கு மாகாணத்தில் ஐந்து வைத்தியசாலைகள் காணப்படுகின்ற காரணத்தினால் கிழக்கு மாகாணத்தில் தொற்றுள்ளவர்களை சிகிச்சையளித்து பராமரிக்கின்ற நிலையேற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது காத்தான்குடி வைத்தியசாலையில் 94 கொரோனா தொற்றாளர்களும், ஈச்சிலம்பற்று வைத்தியசாலையில் 06 நபர்களும், கரடியனாறு வைத்தியசாலையில் 71 பேரும், பதியத்தலாவ வைத்தியசாலையில் 20 நபர்களும், பாலமுனை வைத்தியசாலையில் 70 நபர்களுமாக 261 பேர் தற்போது பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
பேலியகொட தொற்று ஏற்பட்டதன் பின்னர் மொத்தமாக 624 பேர் பராமரித்திருக்கின்றோம், பராமரித்துக்கொண்டிருக்கின்றோம்.
கடந்த மூன்று நாட்களுக்குள் 361 பேரை நாங்கள் சுகப்படுத்தி அவர்களை வீடுகளுக்கு அனுப்பியுள்ளோம்.
கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக கொரோனா தொற்றாளர்கள் பீ. சி.ஆர் பரிசோதனைகள் ஊடாக அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் ஒரு குறிப்பிட்டளவிலேயே பீ.சி.ஆர் சோதனை செய்ய முயுடிம். ஆனால் தொற்றுள்ளவர்கள் பலர் காணப்படலாம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான் குடியில் இனங்காணப்பட்ட நபர் பல இடங்களுக்குப் பிரயாணம் செய்துள்ளார்.
அதேபோன்று ஏறாவூரில் இனங்காணப்பட்டவரில் ஒருவர் மீன் சந்தையுடன் தொடர்புடையவர், மற்றையவர் கொழும்பிலிருந்து வந்தவர்.
மீன் சந்தையுடன் தொடர்பட்டவரின் தொற்று தொடர்பில் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
பல ஊகங்களுக்கு மத்தியில் அந்த நபருடன் சார்ந்தவர்களையும் தனிமைப்படுத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்கள் சுகாதார பிரிவினரால் தெரிவிக்கப்படும் விடயங்களைச் சரியான முறையில் பின்பற்றுங்கள்.
அவ்வாறு நீங்கள் அதனைக் கடைப்பிடிக்கும்போதே கொரோனா தொற்றிலிருந்து உங்களைப் பாதுகாக்க முடியும்.
அனைத்து துறையினரும் இந்த தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு இயலுமான செயற்பாடுகளை முன்னெடுத்த வருகின்றனர்.
இருந்தபோதிலும் தொற்றுக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது. தொற்றுடன் தொடர்பு பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகின்றது.
எங்களால் மட்டும் அனைவரையும் கண்காணிக்கமுடியாது. பொதுமக்கள் வெளியில் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.அவசியமான தேவைகள் இருந்தால் மட்டும் வெளியே செல்லுங்கள்.
வெளியில் செல்லும்போது அருகில் செல்வதைத் தவிர்த்து சமூக இடைவெளியையும், தனிநபர் இடைவெளியையும் பின்பற்றுங்கள் என தெரிவித்துள்ளார்.