மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவு

மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவு

நாட்டில் கொவிட்-19 காரணமாக 4 மரணங்கள் சம்பவித்துள்ளன.

3 பெண்களும், ஆண் ஒருவரும் இவ்வாறு மரணித்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு - மாளிகாவத்தையில் இரண்டு பெண்கள் மரணித்துள்ளனர். ஒருவர் 42 வயதுடையவராவார்.

நீண்ட காலமாக இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

இருதய நோயுடன் கொவிட்-19 தொற்று ஏற்பட்டமையே குறித்த பெண்ணின் மரணத்திற்கு காரணம் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாளிகாவத்தையை சேர்ந்த 69 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்தார்.

நீண்டகாலமாக பல நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த நோய்களின் தாக்கம் தீவிரமடைந்தமையால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த பெண் உயிரிழந்தார்.

கொவிட்-19 தொற்று ஏற்பட்டதுடன், நிமோனியா தாக்கம் அதிகரித்தமையே அவரின் மரணத்திற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், வெல்லம்பிட்டி பகுதியை சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்தார்.

நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், கடந்த தினங்களில் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், உயிரிழந்தார்.

கொவிட்-19 தொற்று ஏற்பட்டதுடன், நிமோனியா தாக்கம் அதிகரித்தமையே அவரின் மரணத்திற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கணேமுல்லை பகுதியைச் சேர்ந்த 88 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்தார்.

அவர் மினுவாங்கொடை கொரோனா நோயாளருடன் தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, லக்கலை - பல்லேகம வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், நோய்த்தாக்கம் தீவிரமடைந்ததை அடுத்து, அங்கொடை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தார்.

கொவிட்19 தொற்று நிமோனியாவானதுடன், குருதி விஷமானதால் அவரது மரணம் சம்பவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் பதிவான கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.