அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் - குழப்பநிலையில்..
கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் நடத்துவதற்கான திகதி தீர்மானித்தல் விவகாரத்தில் குழப்பநிலை ஏற்பட்டள்ளது.
எதிர்வரும் 17ஆம் திகதி நிதியமைச்சராக உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானித்திருந்தார்.
இருப்பினும் நாட்டில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது.
இந்த நிலையில் வழமைபோல வரவு செலவுத் திட்டம் மீது ஒருமாத கால விவாதத்தை நடத்துவதற்கான சங்கடநிலைமை ஏற்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கொரோனா அச்சுறுத்தலினால் கடந்த முறை நாடாளுமன்ற அமர்வு வெறும் இரண்டு மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
அதேபோல நாடாளுமன்ற பார்வையாளர்கள் கலரி மற்றும் செய்தியாளர்களுக்கான அனுமதியும் மறுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலைமையில் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது பற்றி தீர்மானம் எடுப்பதற்கான கலந்துரையாடல் அடுத்தவாரத்தில் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வரவு செலவுத் திட்டம் மீது 10 நாட்கள் விவாதம் நடத்தப்படுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களில் எந்தவித உண்மையும் இல்லை என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.