
எதிர்வரும் நாட்களில் கடுமையாக அமுலாகும் தனிமைப்படுத்தல் சட்டம்!
எதிர்வரும் நாட்களில் தனிமைப்படுத்தல் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்று வழங்கிய செவ்வியொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளி பேணாமை ஆகியனவற்றுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட்-19 நோய்த் தொற்றுடன் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் நோய்த் தொற்று பரவுகையை கட்டுப்படுத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இலங்கை குற்றவியல் சட்டத்தின் 262 சரத்தின் பிரகாரம் ஆறு மாத கால சிறைத்தண்டனையும் பத்தாயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட அடிப்படையில் வேண்டுமென்றே நோய்த் தொற்றை ஒருவர் பரப்பினால் குற்றவியல் சட்டத்தின் 263ம் சரத்தின் அடிப்படையில் இரண்டாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் சட்டத்தை மீறினால் அவர் தனது தொழிலை இழப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மெத்தனப் போக்குடன் நோய்த் தொற்றை திட்டமிட்ட அடிப்படையில் வேண்டுமென்றே பரப்பி அதனால் ஒருவர் உயிரிழந்தால் குற்றவியல் சட்டத்தின் 298ம் சரத்தின் பிரகாரம் ஐந்தாண்டுகள் வரையில் சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
வர்த்தமானி அறிவித்தல் முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் இதனால் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டாலும் இல்லாவிட்டாலும் சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட அனைத்து காரணிகளுக்கும் முன்னுரிமை அளித்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.