வீதி சோதனை சாவடிகளை அதிகளவில் பயன்படுத்த திட்டம்...!
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பகுதிகளில் இன்று மற்றும் நாளைய தினம் வீதி சோதனை சாவடிகளை அதிகளவில் பயன்படுத்துவதற்கு காவல்துறை தீர்மானித்துள்ளது.
வாரஇறுதி நாட்களில் ஊரடங்கு அமுலில் மக்கள் வீதிகளில் நடமாடுவதை விடுத்து தத்தமது வீடுகளிலேயே இருக்க வேண்டுமென காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
ஊரடங்கு அமுல்படுத்தப்படுத்தப்படாத பகுதிகளிலுள்ள மக்கள் தனிமைப்படுத்தல் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொவிட்-19 தொற்றை கட்டுபடுத்தும் நோக்கில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
குறிப்பாக வாரஇறுதி நாட்களில் அதிகளவான சோதனை சாவடிகள் அமைக்கப்படவுள்ளதோடு மேலதிக காவல்துறையினர் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
வாரஇறுதி நாட்களில் விளையாட்டு போட்டிகள், கூட்டங்கள் உள்ளிட்ட விடயங்களை மேற்கொள்வதற்கு முழுமையாக தடை விதிக்கப்படுகின்றது.
ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகள் மாத்திரமின்றி ஏனைய பகுதிகளிலுள்ள மக்களும் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய செயற்படுமாறும் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன கோரிக்கை விடுத்துள்ளார்.
கொவிட்-19 பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் மத்துகம - பதுகம புதிய கொலணி நேற்று பிற்பகல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் மேல் மாகாணம் மற்றும் குளியாட்டிய, எஹேலியகொட காவல்துறை அதிகாரப் பிரதேசங்களிலும் குருணாகல் மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அவ்வாறே தொடர்கின்றது.
அத்துடன் கிரிவுல்ல, மாவனெல்ல, ஹெம்மாத்தகம உள்ளிட்ட காவல்துறை அதிகாரி பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாகவே அறிவிக்கப்பட்டுள்ளன.