கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முழுமையான விபங்கள்...!

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முழுமையான விபங்கள்...!

இலங்கையில் கொவிட்-19 நோய் காரணமாக மரணித்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது

கொழும்பு - 13 பகுதியை சேர்ந்த 79 வயதான பெண்ணொருவர் கடந்த 3 ஆம் திகதி தமது வீட்டில் உயிரிழந்தார்.

இந்தநிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போதான பி.சீ.ஆர் பரிசோதனையில் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த பெண் ஒரு மாதத்திற்கு மேலான காலம் நோய்வாய்ப்பட்டு தமது வீட்டிலேயே இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றுறுதியானமையால் ஏற்பட்ட இருதய நோய் காரணமாக அவர் மரணித்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் கொழும்பு 13 பகுதியை சேர்ந்த 78 வயதான ஆணொருவர் வீட்டில் வீழ்ந்து தலையில் ஏற்பட்ட பாதிப்பை அடுத்து கடந்த 2 ஆம் திகதி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இதற்கமைய அவரது சடலத்திற்கு நேற்று மேற்கொள்ள பிரேத பரிசோதனையின் போது முன்னெடுக்கப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் அவருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

எனினும் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளதோடு அவர் உயிரிழந்தமைக்கு கொவிட்-19 காரணம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேiளை நாட்டில் நேற்றைய தினம் 443 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

அவர்களில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 25 பேருக்கும் தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடைய 418 பேரும் அடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய திவுலப்பிட்டிய மற்றும் பேலியகொட கொத்தணிகளில் இதுவரையில் 8 ஆயிரத்து 709 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதன்படி இலங்கையில் இதுவரையில் 12 ஆயிரத்து 187 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 277 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து நேற்று வெளியேறியுள்ளனர்

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.

இந்தநிலையில் தொற்றுறுதியான 6 ஆயிரத்து 306 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, ஹட்டனில் மேலும் ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

ஹட்டன் , தும்புரகிரிய பகுதியை சேர்ந்த பெண்ணொருவருக்கே இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளது.

அண்மையில் அவருக்கு நோய் நிலைமை ஏற்பட்டிருந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனை முடிவுகளில் அவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளமை தெரியவந்துள்ளது.