தனிமைப்படுத்தப்பட்டவர்களை சிவில் உடையில் கண்காணிக்கும் காவல் துறையினர்...!

தனிமைப்படுத்தப்பட்டவர்களை சிவில் உடையில் கண்காணிக்கும் காவல் துறையினர்...!

கொவிட்-19 கட்டுப்பாட்டு அறிவுறுத்தல்களை பின்பற்றத் தவறுகின்றவர்களை கைதுசெய்வதற்காக, காவற்துறையினர் சிவில் உடையில் தொடர்ச்சியான கண்காணிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் கொவிட்19 பரவல் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில், புதிய சுகாதார அறிவுறுத்தல்கள் அடங்கிய வர்த்தமானி ஒன்று கடந்த ஒக்டோபர் மாதம் 15ம் திகதி வெளியாக்கப்பட்டது.

இந்த வர்த்தமானியின் அடிப்படையில் செயற்படாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காவற்துறை ஊடகப்பேச்சாளர், பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 201 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 31 வாகனங்களும் காவல்துறையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்ட காலம் முதல் தற்போது வரையில், கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 190 ஆக அதிகரித்துள்ளதாக காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.