
22 ஆவது கொரோனா மரணம் தொடர்பில் சுதத் சமரவீர வெளியிட்டுள்ள தகவல்
இலங்கையில் கொரோனா தொடர்பான இறப்புகள் இரண்டு வகைகளின் அடிப்படையில் பதிவாகின்றன என்று தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
இதன்படி, இவை நேரடியான கொரோனா மரணங்கள் என்றும் மறைமுகமான கொரோனா மரணங்கள் என்றும் அழைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இலங்கையில் இன்று பதிவு செய்யப்பட்ட 22ஆவது கொரோனா மரணம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பல கேள்விகள் எழுந்ததை அடுத்து இது குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் போதே அவர் இதனை தெரிவித்தார், தொடர்ந்தும் பேசிய அவர்,
வைத்தியசாலை ஒன்றில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிக்கப்படும் போது ஒருவர் இறக்கும் போது அது நேரடியான கொரோனா மரணமாக இருக்கும்.
இதேவேளை விபத்துக்கள் அல்லது தற்கொலை போன்ற பிற காரணங்களால் இறந்த ஒருவரது, பிரேத பரிசோதனையின் போது, அவர் வைரஸ் பாதிப்புக்குள்ளானதாக உறுதிப்படுத்தப்பட்டால் அது மறைமுகமான கொரோனா மரணமாக அமையும்.
தற்கொலைக்கு முயன்ற பாணந்துரவைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் கடந்த வெள்ளிக்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் இன்று உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனையின் போது நடத்தப்பட்ட பிசிஆர் சோதனைகளில் அவர் வைரஸ் பாதிப்புக்குள்ளானமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனாலேயே இந்த மரணம் இலங்கையின் 22 ஆவது கொரோனா மரணமாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.