லடாக் மோதல் எதிரொலி -முக்கியத்துவம் மிக்க பகுதிகளுக்கு படைக்கலன்களை நகர்த்துகிறது இந்தியா
போர் விமானங்கள், முன்னனி போர்கப்பல்கள் முக்கியத்துவம் வாய்ந்தபகுதிகளுக்கு நகர ஆணையிட்டது இந்திய அரசு. லடாக்கில் நேற்றையதினம் இந்திய - சீன இராணுவத்தினர் பரஸபரம் நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்பை அடுத்து மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு முப்படைகளுக்கும் போர்க்காலத்திற்கு தேவையான விநியோகங்களை கொள்முதல் செய்ய சிறப்பு அதிகாரங்களை வழங்கி உள்ளது. தற்போது நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை போல் எதிர்காலத்தில் எதுவும் நடக்கக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதைப்போல கூட்டுப் படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் முப்படைகளையும் ஒருங்கிணைத்து உடனடி தேவைகளை பூர்த்தி செய்ய கேட்டு கொள்ளப்பட்டுள்ளார். இந்திய கடற்படை தனது முன்னனி போர்க்கப்பல்களை மலாக்கா ஜலசந்தி அருகேயும் தேவைப்பட்டால் இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் எங்கு வேண்டுமானாலும் நகர்த்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய விமானப்படையும் போர் விமானங்களை முன்னனி தளங்களுக்கு அனுப்பி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.