‘சூரரைப்போற்று’ ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்? - சூர்யா விளக்கம்

சூரரைப்போற்று’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது ஏன் என்பது குறித்து நடிகர் சூர்யா அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘சூரரைப்போற்று’. இந்தப் படத்தை வருகிற 30ம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட இருப்பதாக சூர்யா அறிவித்திருந்தார். இதனிடையே, அமேசான் பிரைம் வெளியிட்டுள்ள இந்த மாதத்துக்கான படங்கள் வெளியீட்டுப் பட்டியலில் சூரரைப் போற்று இடம் பெறவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் ஏன் என்று கேள்வி எழுப்பி வந்தனர்.

 

இந்நிலையில் நடிகர் சூர்யா, அறிக்கை மூலம் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சூரரைப்போற்று படம் விமானப் போக்குவரத்து சம்பந்தமான கதைக்களத்தை கொண்டது. மேலும் இந்திய விமானப்படை மற்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்புடையது என்பதால், அவர்களிடம் பல அனுமதிகளை பெற வேண்டி இருந்தது. இன்னும் சில என்.ஓ.சி. எனப்படும் தடையில்லா சான்றிதழ்களுக்கு ஒப்புதல் பெற வேண்டியுள்ளது.

 

சூர்யா

 

அதனால் இந்த காத்திருப்பு தவிர்க்க முடியாததாக உள்ளது. இதனால் படம் ரிலீஸ் ஆவதற்கு எதிர்பார்த்ததை விட அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்தப் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் நலம் விரும்பிகளை மேலும் காக்க வைப்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. ஆனால் அவர்கள் இதை அன்புடன் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன். இவ்வாறு சூர்யா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.