காதலில் இனிமை.. கல்யாணத்தில் வெறுமை..இன்றைய தம்பதிகளின் வாழ்க்கையில் ஏன் இந்த முரண்பாடு?

காதலிக்கும்போது இணையை பார்த்துவிட மனது துடிக்கும். நாள் முழுவதும் பேசிக்கொண்டிருக்க வாய்ப்பு கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பும் உருவாகும். திருமணத்திற்கு பின்பு எல்லாம் தலைகீழாக மாறிவிடுகிறது.

காதலிக்கும் காலம் ஏக்கமும், எதிர்பார்ப்பும் நிறைந்தது. அப்போது எல்லா நேரமும் உற்சாகம் பொங்கிக்கொண்டிருக்கும். காதலிக்கும்போது இணையை பார்த்துவிட மனது துடிக்கும். நாள் முழுவதும் பேசிக்கொண்டிருக்க வாய்ப்பு கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பும் உருவாகும். திருமணத்திற்கு பின்பு எல்லாம் தலைகீழாக மாறிவிடுகிறது.

முன்பு நிறைகளாகத் தெரிந்தது, பின்பு குறைகளாகத் தென்படும். பார்த்துக்கொண்டே இருக்க மாட்டோமா என்ற நிலை, பார்க்காமலே இருக்கமாட்டோமா என்றாகும். ‘இரண்டு நாட்கள் கூட உன்னைப்பிரிந்து என்னால் இருக்க முடியாது’ என்ற வார்த்தை, ‘இரண்டு மாதங்கள் உன்னைப் பிரிந்து எங்கேயாவது போய் விடலாமா என்று தோன்றுகிறது’ என்று சொல்ல வைக்கும்.

 


இந்த தலை கீழ் மாற்றத்தை உருவாக்குவது நமது உடலில் சுரக்கும் ‘பி.இ.ஏ.’ மற்றும் ‘ஆக்சிடோசின்’ என்ற ஹார்மோன்கள். காதலிக்கும்போதும், திருமணமான புதிதிலும் அதிகமாக சுரக்கும் இவை, திருமணத்திற்குப் பிறகு குறையத் தொடங்குகிறது. இவை குறைந்து கொண்டிருக்கும் நேரத்தில், குறைய வேண்டிய ‘செரட்டோனின்’ என்ற ஹார்மோன் அதிகமாக சுரந்து, காதலை கசக்கச் செய்ய முயற்சிக்கும். இதற்கு புதுமணத்தம்பதிகள் இடம் கொடுத்துவிடக்கூடாது.

அதற்காக அவர்கள் திருமணத்திற்கு பிறகும் ஒருவரை ஒருவர் காதலிக்கவேண்டும். முன்பு போல் அதிக நேரம் பேசவேண்டும். வாழ்க்கையின் இனிமையான விஷயங்களை பேசி ஒருவரை ஒருவர் கவரவேண்டும். தினமும் இரண்டு மணிநேரத்தை கணவனும், மனைவியும் தங்களுக்காக ஒதுக்கிக்கொள்ளவேண்டும். அப்போது தங்கள் தனிமைக்குள் நுழைய டி.வி., செல்போன், உறவினர்களுக்குகூட இடம் கொடுத்துவிடக்கூடாது. அந்த தனிமையை இனிமையாக நீங்கள் செலவிட்டால் ‘பி.இ.ஏ.’ ‘ஆக்சிடோசின்’ ஹார்மோன் சுரப்பு அதிகமாகி, தம்பதிகளுக்குள் வற்றாத காதல் உணர்வு பெருகும்.

மண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கும் தம்பதிகளிடம் அன்பு அதிகமாக இருக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அன்பைபோல் அதிகம் இருக்கவேண்டிய இன்னொன்று நேர்மை. அன்பு கலந்த நேர்மை இருந்தால் வாழ்க்கை அதிகம் இனிக்கும். நேர்மையை காப்பாற்ற, கணவருக்குத் தெரியாமல் மனைவியோ- மனைவிக்குத் தெரியாமல் கணவரோ எந்த ரகசியத்தையும் வைத்திருக்கக்கூடாது. ஒருவருக்குத் தெரியாமல் இன்னொருவர் எந்த காரியத்தையும் செய்யவும் கூடாது. எங்கே போகிறோம்? யாருடன் போகிறோம்? என்பதை தெரிந்து கொள்ளும் உரிமையை வாழ்க்கைத் துணைக்கு வழங்க வேண்டும். திருமணத்திற்கு முன்பு ரகசியங்கள் இருந்தாலும் அதை எல்லாம் அப்போதே மறந்துவிட்டு, திருமணத்திற்கு பின்பு நேர்மையை மட்டுமே கடைப்பிடிக்கவேண்டும்.

திருமணத்தில் கணவன், மனைவி ஆகிய இருவர் மட்டுமில்லை, இரு குடும்பங்களும் இணைகின்றன. அதன் மூலம் புதுப்புது உறவுகளும் பூக்கின்றன. இதில் விருந்தாளிகளும் குறிப்பிடத்தக்கவர்களாக இருக்கிறார்கள்.

நாம் விருந்தாளிகளை நன்றாக உபசரிப்போம். அவர்கள் விரும்புகிற மாதிரி நடந்து கொள்வோம். அவர்களது முகங்கோணக்கூடாது என்பதில் முழு கவனம் செலுத்துவோம். நாம் விரும்பி வாங்கி வைத்திருக்கும் பொருள் ஒன்றை அவர் எடுத்துப் பார்க்கும்போது கைதவறி அது கீழே விழுந்து உடைந்துவிட்டாலும் கோபம் கொள்ளமாட்டோம். அது எவ்வளவு சென்டிமென்ட் கொண்ட பொருளாக இருந்தாலும், ‘அவர் தெரியாமல் உடைத்துவிட்டார்’ என்று நமது மனம் ஏற்றுக்கொள்ளும்.

அதே நடைமுறையை கணவன் மனைவியிடமும், மனைவி கணவரிடமும் காட்டவேண்டும். விருந்தாளிகள் அனைவரிடமும் இனிக்க இனிக்க பேசிவிட்டு, அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறியதும் வாழ்க்கைத்துணையிடம் எரிந்துவிழக்கூடாது. விருந்தாளிகளிடம் நடப்பது போன்று அன்பையும், பாசத்தையும் வாழ்க்கைத்துணையிடமும் காட்டவேண்டும். அப்படிக்காட்டினால் வாழ்க்கை இனிக்கும்.

விருந்தாளிகளிடம் பேசுவது போன்ற மென்மையான வார்த்தைகளை கணவனும்- மனைவியும் தங்களுக்குள்ளும் பேசிக்கொள்ள வேண்டும். பிடிக்காத காரியம் ஒன்றை செய்துவிட்டாலும் ‘நீ அப்படி செய்திருக்கக் கூடாது’ என்று கடுமைகாட்டாமல், ‘நீ இப்படி செய்திருக்கலாமே!’ என்று மென்மையாக எடுத்துச் சொல்வதே சிறந்த வழி. ‘ஏன் இப்படி நடந்துகொண்டாய்? உனக்கு அறிவே இல்லையா?’ என்று கேட்பதற்கு பதில், ‘அடுத்த முறை நீ இப்படி பக்குவமாக நடந்துகொள். உன்னால் அதுவும் முடியும்’ என்று வலிக்காமல் பேசவேண்டும்.

இப்படி மென்மையாகப் பேசினால், உங்கள் வார்த்தைகளுக்கு வசிய சக்தி கிடைக்கும். இது போன்ற வார்த்தைகளை நீங்கள் எல்லா தருணங்களிலும் பிரயோகம் செய்து பாருங்கள். உங்கள் துணையை காயப்படுத்தாமலே நீங்கள் விரும்பியதை பெற முடியும். கணவர்-மனைவிக்கு இடையில் மட்டுமின்றி பிள்ளைகள், வேலையாட்கள், சக ஊழியர்கள், அக்கம் பக்கத்தினர் என எல்லோரிடத்திலுமே அன்பையும், நட்பையும் வளர்க்க இந்த அணுகுமுறையை பின்பற்றலாம்.