இறக்கும் போது உயிர் பிரியும் வாசல்கள் இவைதான்! வாய் வழியாக உயிர் பிரிந்தால் இதுதான் நடக்கும் - அகத்தியர் கூறும் ரகசியம்..
வாழும் பொழுது இல்லாத ஆட்டம் எல்லாம் போட்டு விட்டு இறுதி காலகட்டத்தில் தான் நமக்கு புத்தியே வருமாம். உடலில் பலம் இருக்கும் வரை நமக்கு நாம் செய்யும் தவறுகள் தெரிவதில்லை. ஆனால் உடலில் இருந்து பலம் நீங்கும் இறுதி காலகட்டத்தில் நல்லவராக இருக்க ஆசைப்படுவோம். ஏனெனில் அந்த சமயத்தில் தான் நம்மால் நம்முடைய தவறுகளை மனமார உணர முடியும்.
நம் உடலை விட்டு உயிர் பிரியும் சமயத்தில் அந்த ஆத்மாவிற்கு ஏதாவது ஒரு வாசல் தேவைப்படுகிறது. அதற்காக உடலில் இருக்கும் துவாரங்கள் வழியாக வெளியேறுவதாக அகத்தியர் தனது கர்மகாண்டம் என்கிற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வகையில் எந்தெந்த வழியாக உடலில் இருந்து உயிர் பிரிந்தால்? என்னென்ன பலன்கள் கிடைக்கும்? என்பதை அறிந்து கொள்ளவோம்.
நம்முடைய பாவங்களுக்கும், புண்ணியங்களுக்கு ஏற்றவாறு தான் நம்முடைய ஜீவன் பிரியுமாம். அப்படி பார்க்கும் பொழுது பாவங்களை அதிகமாக செய்தவர்களுக்கு, அவர்களது இறுதி நேரத்தில் உயிர், மலவாசல் வழியாக நேரடியாக நரகத்திற்குச் சென்று விடுமாம். மறுபிறவியிலும் இவர்கள் படாதபாடு படவேண்டி இருக்குமாம்.
அது போல் பாவங்களை தெரிந்தே செய்பவர்களுக்கு அவர்கள் இறக்கும் தருவாயில் சிறுநீர் கழிக்கும் இடத்தில் இருந்து உயிர் பிரிந்து விடும். மறுபிறவியில் அவர்கள் பலரிடமும் அவமானப்பட நேரிடும். புண்ணியம் குறைவாகவும், பாவம் அதிகமாகவும் செய்தவர்களுக்கு அவர்கள் இறக்கும் தருவாயில் ஆத்மாவானது நாபிக்கமலம் வழியே பிரியுமாம். இவர்கள் மறுபிறவியில் ஊனமுற்றவர்களாக, தீராத நோயுடனும் கஷ்டப்பட வேண்டியது தான்.
எவ்வளவு புண்ணியம் செய்திருக்கிறார்களோ அதே போல அதே அளவிற்கு பாவம் செய்தவர்கள் இறக்கும் தருவாயில் அவர்களுடைய ஆத்மா வாய் வழியே சென்று விடுமாம். இப்படியான உயிர்களுக்கு மறுபிறவியில் சாப்பாட்டுக்கு அலையும் மனிதர்களாக பிறப்பார்கள்.
அதிகம் பாவத்தை செய்யாதவர்கள் இறக்கும் தருவாயில் மூக்கு துவாரம் வழியாக ஆத்மாக்கள் பிரிந்து விடும். இதனால் அவர்களின் மறு பிறவியில் நறுமணத்தை அதிகம் விரும்புபவர்களாக பிறப்பார்கள். மிக சிறிதளவே பாவம் செய்தவர்கள் இறக்கும் நேரத்தில் காதுகள் வழியாக அவர்களுடைய உயிர் பிரியும். இதனால் அவர்களுடைய மறு பிறவியில் நிறைய விஷயங்களை காதால் கேட்டு கற்றுக்கொள்வதற்கு விரும்புவார்கள். மேலும் முக்தி கிடைக்க போராட்டம் செய்வார்கள்.
புண்ணியம் செய்தவர்கள் கண்கள் வழியாக உயிர் பிரிய நேரிடும். இவர்களுடைய மறுபிறவியில் அறிவும், செல்வமும் கொண்டு உயர்வான வாழ்க்கையை வாழ்வார்கள். மேலும் பயபக்தியுடன், மோட்சத்தை தேடி, பழி பாவத்திற்கு அஞ்சி, நல்லபடியாக வாழ்வார்கள்.
அது போல் பக்தி நெறியில் வாழ்ந்து எந்த உயிருக்கும் தீங்கு இழைக்காத உயிர்கள் சாகும் நேரத்தில் சுழுமுனை நாடி வழியாக உயிரை மேலே எழுப்பி பிரம்மாண்ட வழியை திறந்து மண்டை ஓட்டு வழியாக ஒளிமயமான ரூபத்தில் செல்லுமாம். இந்த உயிர்கள் மீண்டும் பிறவிகள் எடுக்காது.
அதனால் தான் வாழும் காலத்திலேயே நல்லது செய்து வாழ வேண்டும் என்று கூறுகின்றனர். இவைகள் முக்காலமும் அறிந்த அகத்தியர் பெருமான் உலக மக்களுக்கு தெளிவாக எடுத்து வைத்துச் சென்றுள்ளார் என்பதே நிதர்சனம்.