மத்துகமவில் வங்கி சேவையாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று

மத்துகமவில் வங்கி சேவையாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று

நாட்டில் நேற்றைய தினம் 61 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது

அவர்கள் அனைவரும் மினுவாங்கொடை ப்ரெண்டெக்ஸ் கொத்தணியை சேர்ந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவர்களில் 13 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்கள்.

48 பேர் நோயாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய மினுவாங்கொடை கொத்தணியில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 75 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொவிட் 19 தொற்றிலிருந்து நேற்றைய தினம் 8 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 403 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரையில் 5 ஆயிரத்து 536 பேர் கொரேனா வைரசால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், கொவிட் 19 தொற்றால் பீடிக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்து 120 நோயாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, புங்குடுதீவில் கொரோணா தொற்றென இனங்காணப்பட்ட பெண் பயணித்த பேருந்தின் நடத்துனருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானது.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் அவருடன் பயணித்த அனைவரும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இது சமூகத்தொற்று என பொது மக்கள் வீண் குழப்பமடையத் தேவையில்லை என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்

இதேவேளை, ஆமர் வீதி காவல்துறை நிலையத்தின் அதிகாரி ஒருவரின் குடும்ப உறுப்பினர்கள் இருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்த காவல்துறை நிலையத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்;ட 16 அதிகாரிகளும்; சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஆமர் வீதி காவல்துறை நிலையத்தில் தற்காலிகமாக வேறு சில காவற்துறை நிலையங்களின் காவற்துறை அதிகாரிகள் கடமையாற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் இந்த முறை கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் 7 மாணவர்களுக்கு இதுவரை கொவிட்-19 தொற்றுறுதியானது.

இதுவிர, சீதுவ - பொது சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 28 பேர் கொவிட்- 19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அவர்கள் லக்கல, நெவில் பெர்ணான்டோ மற்றும் பல்லேகம ஆகிய மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மேலும் ஒரு வங்கி சேவையாளருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

மத்துகம பிரதேசத்திலுள்ள தனியார் வங்கி நிறுவனத்தின் சேவையாளருக்கே கொவிட்-19 தொற்றுதியானது.

அத்துடன், வெள்ளவத்தை பகுதியில் உள்ள தனியார் வங்கியொன்றில் கடமையாற்றிவரும் ஊழியர் இருவர் மற்றும் அவர்களது தாயார் இருவருக்கும் கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பிரிவி தெரிவித்துள்ளது.

இதனிடையே, மத்துகம பிரதேச செயலகத்தில் ஓவிட்டிகல, பதுகம, புதிய கொலனி ஆகிய இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த தினம் மத்துகம - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்து ஒன்றின் சாரதி கொவிட் 19 நோய்த்தொற்றுக்கு உள்ளாகி இருந்த நிலையில், அவருடன் அனுராதபுரத்துக்கு யாத்திரை மேற்கொண்ட 17 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதியானது.

களுத்துறை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் தகவல்படி இதுவரையில் மத்துகம பிரதேசத்தில் மாத்திரம் 30 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது

இதேவேளை, வெள்ளவத்தை பிரதேசத்திலுள்ள தனியார் வங்கி ஒன்றின் இரண்டு சேவையாளர்கள் மற்றும் அவர்களின் தாய்மாருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக கஹத்துடுவ சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொவிட் 19 நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இரண்டு சிகிச்சை அறைகளில் நோயாளர்களை அனுமதிமதிப்பது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இருதய சத்திரசிகிச்சைக்கான நோயாளர்கள் தங்கி இருந்த இலக்கம் 34 மற்றும் 36 ஆகிய சிகிச்சையறைகளே இவ்வாறு மூடப்பட்டிருப்பதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

34ம் அறையில் தங்கி இருந்த ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நேற்று கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் குறித்த இரண்டு சிகிச்சை அறைகளின் நோயாளர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்களை அங்கேயே தங்க வைத்து பி.சீ.ஆர்.பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.