இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 11 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 11 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 354065 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 10974 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2003 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11903 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 186935 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 155227 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 113445 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 48019 பேருக்கும், டெல்லியில் 44688 பேருக்கும், குஜராத்தில் 24577 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.