கிளிநொச்சியில் ஈழத் தமிழர்களின் பழங்கால தொல்லியல் ஆதாரங்கள்! யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர் கண்டுபிடிப்பு
கிளிநொச்சி - பூநகரி பகுதியிலுள்ள முழங்காவில் நகருக்கு அண்மையில் நாகபடுவான் பகுதியில் நாக வழிபாட்டை குலமரபுத் தெய்வ வழிபாடாக மக்கள் கொண்டிருந்தமை தொடர்பிலான தொல்லியல் ஆதாரங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை, தொல்லியல் துறையின் மூத்த பேராசிரியர் புஷ்பரட்ணம் இதனை கண்டுபிடித்துள்ளார்.
இந்த நிலையில், நாக பாம்பை பானையில் வைத்து வழிபாடுகளை செய்தமைக்கான ஆதரங்களும் கிடைக்கப் பெற்றுள்ளதாக பேராசிரியர் புஷ்பரட்ணம் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
வட இலங்கை மக்களிடையே நாகத்தை பானைகளில் வைத்து வழிபாடு செய்த தொன்மையான வரலாறு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
நாககுளம் என்ற பொருளை கொண்ட இந்த ஊரின் பெயர் மாற்றம் பெறாது, பண்டைய தமிழ்ச் சொல்லிலேயே நாகபடுவான் என அழைக்கப்படுவதாக பேராசிரியர் விளக்கமளிக்கின்றார்.
குறித்த இடத்திலிருந்து ஆதிகால பண்பாட்டுச் சின்னங்கள், சுடுமண்ணிலான நாகச் சின்னங்கள், பீடத்துடன் கூடிய நாகம், நாகினி சிலைகள், சிற்பங்கள், நாக கற்கள் உள்ளிட்ட பழமை வாய்ந்த அடையாள சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நாகச் சிற்பத்தை பானையில் வைத்து வழிபட்டமைக்கான சான்றுகள் தொல்லியல் அறிஞர்களுக்கு புதிய விடயங்களாக உள்ளது எனவும் அவர் கூறுகின்றார்.
அத்துடன், அந்த பானையைச் சுற்றி மூடிய நிலையில் பாம்பு புற்றை அடையாளப்படுத்தும் 4 சிறு கலசங்களும் காணப்படவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
பானையிலிருந்து மண் அகற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்ட போது, நாக பாம்பின் சிலை பானையால் மூடப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பானையின் மூன்று திசைகளிலும் தெய்வங்கள் அமர்ந்திருக்கும் பீடங்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
அவற்றில் அமர்ந்துள்ள தெய்வங்களின் இடது கால் பானையை முட்டியவாறு உள்ளது.
நான்காவது திசையில் மண் சட்டிகளின் விளிப்புப் பகுதியில் நான்கு திசைகளை நோக்கியவாறு நாகபாம்பு படமெடுத்த நிலையில் இருக்க, அவற்றின் வால் பகுதிகள் சட்டிக்குள் இணைந்து சட்டியின் நடுமையத்தில் ஒரு வட்டமாகக் காணப்படுகின்றது.
இந்த ஆதாரங்கள் பாம்பு புற்று வழிபாடு தோன்றுவதற்கு முன்னோடியாக ஆதியிரும்புக்காலப் பண்பாட்டுடன் தோன்றிய தொன்மையான வழிபாட்டு மரபு எனக் கூறலாம் என பேராசிரியர் குறிப்பிடுகின்றார்.
அத்துடன், ஒன்று மேற்பட்ட நாக வடிவங்கள், மண் சட்டிகளில் வைக்கப்பட்டமைக்கான ஆதாரங்களும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.