
பிரதமர் தலைமையில் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் முக்கிய சந்திப்பு
அரசாங்கத்தின் அனைத்து அங்கத்துக கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று இன்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதன்போது 20ம் திருத்தச்சட்டமூலம் குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் நாளையதினம் ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் ஒன்றும் கொழும்பில் நடைபெறவுள்ளது.
இதன்போதும், 20ம் திருத்தச் சட்டமூலம் தொடர்பாக அவதானம் செலுத்தப்படவுள்ளது.
20ம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆராய்ந்த உயர்நீதிமன்றின் நீதியரசர்கள் ஆயம், தமது வியாக்கியானத்தை சபாநாயகருக்கு அனுப்பிவைத்துள்ளது.
இந்த வியாக்கியானம் எதிர்வரும் 20ம் திகதி சபாநாயகரால் நாடாளுமன்றில் அறிவிக்கப்படும்.
அதேநேரம் எதிர்வரும் 21ம் மற்றும் 22ம் திகதிகளில் 20ம் திருத்தச் சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இந்தநிலையில் இந்த சந்திப்புகள் இடம்பெறுகின்றன.