முடக்கப்பட்ட புங்குடுதீவின் தற்போதைய நிலை! அரச அதிபர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

முடக்கப்பட்ட புங்குடுதீவின் தற்போதைய நிலை! அரச அதிபர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

புங்குடுதீவு முடக்க நிலைமை வெகு விரைவில் நீக்கப்படும் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துன்னார். யாழிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு அநாவசியமாக பயணிப்பதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது யாழ் மாவட்ட கொரோனா நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது இருந்த போதிலும் எந்தநேரமும் தொற்று எந்த வழியிலும் ஏற்படலாம் என்ற அச்ச நிலைமை காணப்படுகின்றது. இன்றைய நிலவரப்படி யாழ் மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று வரை புங்குடுதீவு பகுதி தவிர்ந்த 468 குடும்பங்களைச் சேர்ந்த 1055 நபர்களை தனிமைப்படுத்தியிருக்கின்றோம்.

இந்த எண்ணிக்கை சற்று குறைவடைந்துள்ளது அதேபோல ஆரம்பத்தில் கட்டாய தனிமைப்படுத்தலுக்குள்ளானவர்கள் 28 ஆக இருந்தது தற்போது 9 ஆக குறைவடைந்துள்ளது. ஒருவருக்கு மாத்திரமே யாழ்ப்பாண குடாநாட்டில் தொற்று உறுதியாகியுள்ளது. அவர் ஆடை தொழிற்சாலையில் கடைமையாற்றி புங்குடுதீவு பகுதிக்கு வருகை தந்தபோது தொற்றென கண்டறியப்பட்டுள்ளார்.

எனினும் யாழ்ப்பாண மாவட்டத்தில் சுகாதாரப் பகுதியினர் தொடர்ச்சியாக விழிப்புணர்வு செயற்பாடுகளையும் பரிசோதனைகளையும் முன்னெடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 4 ஆம் திகதி கடற்படையைச் சேர்ந்த பெண் உத்தியோகத்தர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு பிரயாணம் செய்து அதே தினம் மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு புகையிரதத்தின் மூலம் திரும்பி இருக்கின்றார்.

எனவே அவர் பயணித்த புகையிரதத்தில் பயணித்தவர்கள் தங்களுடைய விபரங்களை பதியுமாறு ஏற்கனவே சுகாதார பிரிவினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இன்னொரு கடற்படை உத்தியோகத்தர் கடந்த 6 திகதி யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி சென்று அதே தினம் மீண்டும் யாழ்ப்பாணம் வந்திருக்கிறார். எனவே அவர் பயணித்த பேருந்தில் பயணித்தவர்கள் தொடர்பிலும் ஏற்கனவே சுகாதாரப் பிரிவினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவர் பயணம் செய்த பஸ் வண்டியில் பயணம் செய்தவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களுடைய பதிவுகளினை மேற் கொள்ளும்போது தங்களையும் சமூகத்தையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும். புங்குடுதீவு பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக முடக்கம் PCRபரிசோதனையினுடைய இறுதி பெறுபேறு கிடைத்த பின்னர் நீக்குவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேநேரம் க.பொ.த உயர்தர பரீட்சைகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் எந்தவித தடையுமின்றி வழமைபோல் இடம்பெற்று வருகிறது. அதற்குரிய ஏற்பாடுகள் சுகாதார பகுதியினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்றுவரை எந்தவித தடையும் இல்லாது குறித்த பரீட்சையானது சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. தற்போதைய கொரோனா நிலைமையில் யாழ் மாவட்ட மக்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் போன்ற அறிவுறுத்தல்கள் சுகாதார பிரிவினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் அநாவசியமற்ற தேவையற்ற பயணங்களை பெரும்பாலும் தவிர்ப்பது மிகவும் நல்லது அத்துடன் ஒன்றுகூடல்கள் விழாக்கள், கொண்டாட்டங்கள் நடத்துவதனை தவிர்த்தல் வேண்டும் அரச திணைக்களங்கள் பொது இடங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளிகளை பேணுதல் மிக முக்கியமானது.

தற்போது அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவித்தலின் படி முகக் கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது அரச ,தனியார் நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் அதற்குரிய விளம்பரங்களை காட்சிப்படுத்தி வைப்பது அவசியமானது. பொதுமக்கள் கூடுமானவரை அரச அலுவலகங்களுக்குச் செல்லாது தொலைபேசி வழியாகவோ அல்லது இணையமூலமோ தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வது மிகவும் நல்லது.

தேவையேற்படின் மாத்திரம் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நீங்கள் தங்களுடைய சேவைகளை நேரில் சென்று பெற்றுக்கொள்ள முடியும் மேலும் ஆலயங்கள் மற்றும் வழிபாட்டு இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் அவசியமான தேவைகளிற்கு மட்டும் செல்லுங்கள் அப்படி செல்பவர்களும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றல் வேண்டும்.

அத்துடன் பயணிக்கும் வாகனம் மற்றும் வாகனத்தில் பயணம் செய்வோர், எங்கெங்கு செல்கிறீர்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் குறித்து வைத்திருத்தல் வேண்டும் அநாவசியமான வெளிமாவட்ட பயணங்களை தவிர்த்தல் இந்த காலகட்டத்தில் மிகவும் சிறப்பானதாக அமையும். அத்தோடு அபாயகரமான மாவட்டங்களுக்கு செல்வதையும் தவிர்ப்பது மிகவும் நல்லது.

இலங்கையில் தற்பொழுது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு கொரோனா வைத்தியசாலை அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்ய வேண்டிய கட்டம் இருக்கின்றது. அந்த வகையிலே யாழ்ப்பாணத்தில் மருதங்கேணி வைத்தியசாலை தற்போது கொரோனா வைத்தியசாலையாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் அந்த வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு தொடர்ந்து இயங்கும் தேவை ஏற்படின் மாத்திரமே அங்கே கொரோனா நோயாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

அத்தோடு அந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொற்று உறுதியானவர்கள் உடனடியாக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்படுவார்கள். எனவே இது ஒரு எதிர்பாராத நிலைமை ஏற்படும் இடத்தில் அந்த வைத்தியசாலையினை பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.