புதிய PCR இயந்திரத்தை உருவாக்கிய குருநாகலை வைத்தியர்கள்!

புதிய PCR இயந்திரத்தை உருவாக்கிய குருநாகலை வைத்தியர்கள்!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களை,  PCR பரிசோதனைக்கு உட்படுத்த குருநாகல் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர்களினால் புதிய PCR இயந்திரமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களை பரிசோதிப்பதற்கு, இதுவரை  PCR இயந்திரமொன்று இல்லாத காரணத்தினாலேயே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் வேறு சிகிச்சைப் பிரிவுகளில் இருந்த, பரிசோதனை இயந்திரங்களின் உதிரிப்பாகங்களை ஒன்றிணைத்து, குறித்த  PCR இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

குறித்த  இயந்திரத்தில்,  முறையான  PCR இயந்திரத்தில் காணப்படும் தொழிற்பாடுகள் இல்லாத போதிலும், அதன் ஊடாக நாளாந்தம் சுமார் 10 PCR பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என குருநாகல் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சந்தன கெந்தன்கமுவ தெரிவித்துள்ளார்.

தெங்கு ஆராய்ச்சி நிலையத்தின் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்ட PCR இயந்திரமே இதுவரை குருநாகல் போதனா வைத்தியசாலையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், குறித்த இயந்திரத்தை மீண்டும் வழங்க வேண்டிய தேவையின் அடிப்படையில், இவ்வாறு புதிய PCR இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளதாக, வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, புதிய இயந்திரத்தின ஊடான PCR பரிசோதனைகளை நாளை (19) முதல் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக குருநாகல் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சந்தன கெந்தன்கமுவ மேலும் தெரிவித்துள்ளார்