யாழில் பெற்றோரின் கவனயீனத்தால் பரிதாபமாக உயிரிழந்த 3 வயது குழந்தை

யாழில் பெற்றோரின் கவனயீனத்தால் பரிதாபமாக உயிரிழந்த 3 வயது குழந்தை

யாழ்ப்பாணம், வடமராட்சி, அல்வாய் பகுதியில் கதிரையிலிருந்து விழுந்த 3 வயது ஆண் குழந்தை 5 நாட்களின் பின் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெபநேசன் சியோன் என்ற 3 வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

அல்வாய் பகுதியைச் சேர்ந்த குறித்த குழந்தை கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு வீட்டில் கதிரையில் இருந்த போது தவறுதலாக விழுந்துள்ளான்.

குழந்தை விழுந்ததை பெற்றோர்கள் பெரிதும் கவனத்தில் எடுக்காத நிலையில், குறித்த குழந்தையின் தலைப்பகுதி வீங்கி காதுப்பகுதிகள் வலிப்பதாக நேற்றைய தினம் தனது பெற்றோரிடம் தெரிவித்தான்.

இதையடுத்து பெற்றோர் குழந்தையின் தலைப்பகுதியை அவதானித்தனர், அத்துடன் குழந்தைக்கு காய்ச்சலும் இருந்துள்ளது.

இதனால் பெற்றோர் நேற்று மதியம் மந்திகை ஆதார வைத்தியசாலையில் குழந்தையை சேர்த்தனர்.

அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தை மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.