கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் இன்றைய தினம் வெளியான தகவல்

கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் இன்றைய தினம் வெளியான தகவல்

வைத்தியசாலைகளுக்கு செல்பவர்கள் முகக்கவசம் அணிதல். சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் எஸ்.ஸ்ரீதரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்வையிட வருபவர்களின் எண்ணிக்கையை மட்டுபடுத்திக் கொள்ளுமாறும் அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

மேலும் நோயாளிகளுக்கான பொருட்களை நேரில் சென்று வழங்காமல் உரிய பணியாளர்களின் ஊடாக வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர அத்தியாவசிய மருத்துவ தேவைகளுக்கு வதிவிடங்களுக்கு அருகிலுள்ள வைத்தியசாலைகளை நாடுமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் எஸ்.ஸ்ரீதரன் கோரி;க்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, பொதுமக்கள் இயலுமானவரை நாணயத்தாள்களை பயன்படுத்துவதை தவிர்த்து ஏ.ரீ.எம் அட்டைகள் மற்றும் இணையவழி பணப்பறிமாற்றங்கள் ஊடாக தங்களது தேவைகளை பூர்த்தி செய்யுமாறு அரச மருத்துவ அதிகரிகள் சங்கம் கோரியுள்ளது.

அதன் ஊடக குழு உறுப்பினரும், மத்திய குழு உறுப்பினருமான வாசன் ரட்ணசிங்கம் எமது வானொலியில் இன்று இடம்பெற்ற விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு இதனை தெரிவித்துள்ளார்.

நாணயதாள்களின் ஊடாக ஒருவரில் இருந்து இன்னொருவருக்கு கொவிட் 19 தொற்று பரவலடைவதற்கு வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விழுதுகள் நிகழ்ச்சியின் முழுமையான காணொளியினை சூரியனின் பேஸ்புக் பக்கத்திலும் யுடியுப் தளத்திலம் பார்ரைவயிட முடியும்.

இதேவேளை, மட்டக்களப்பு மாநகரசபைக்குட்டபட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் சுகாதார வழிமுறைகள் பின்பற்றுகின்றதா என்பது தொடர்பில் காவற்துறையினர் சோதனை நடவடிக்கைகளை இன்று மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது பல வர்த்தக நிலையங்களில் கடமையாற்றுகின்ற ஊழியர்கள் முகக்கவசம் அணியாது இருப்பதை அவதானித்துள்ள நிலையில், அவர்களுக்கு காவற்துறையினால் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கடந்த 23 ஆம் திகதிக்கு பின்னர் மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையின் பணியாளர்களை சந்தித்தவர்கள் உடனடியாக பி.சீ.ஆர் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
உள்நாட்டுச் செய்தி

நாட்டில் கொவிட் 19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 10 பேர் இன்று குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொவிட் 19 தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 306 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம், ஆயிரத்து 204 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

பொரளை - சீமாட்டி ரிஜ்வே மருத்துவமனையில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு அமைவாக அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியானதாக கொழும்பு மாநாகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் பொலனறுவையை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

பொரளை - சீமாட்டி ரிஜ்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 5 மாத குழந்தை ஒன்றின் தந்தைக்கு முன்னதாக கொரோனா வைரஸ் தொற்றுறுதியானது.

இந்த நிலையில், அவருடன் தொடர்புடையவர் என்ற அடிப்படையில் குறித்த குழந்தை அந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றது.

இந்தநிலையில், குறித்த குழந்தை சிகிச்சை பெறும் நோயாளர் அறையில் ஊழியராக சேவையில் ஈடுப்பட்டிருந்த அந்த பெண்ணுக்கும் கொரோனா வைரஸ் தொற்றுறுதியானதாக கொழும்பு மாநாகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாணந்துறை வைத்தியசாலையின் பிரதான தாதியின் மகளுக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் முகாமைத்துவ பீடத்தில் மூன்றாம் ஆண்டில் பயிலும் அவர் மினுவாங்கொடை பிரண்டிக்ஷ் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண்ணொருவரின் மகளுடன் தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.

எவ்வாறாயினும், பல்கலைகழக விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையினால் கடந்த வாரம் அவர் பாணந்துறையிலுள்ள தமது வீட்டிற்கு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

மினுவாங்கொடை - பிரண்டிக்ஷ் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண்ணின் மகளுடன் தங்கிருந்தமையால் குறித்த பல்கலைகழக மாணவிக்கு பாணந்துறை வைத்தியசாலையில் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது அவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதோடு அவருக்கு அங்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திலுள்ள தொழிற்சாலையில் பணியாற்றும் 14 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளமை தற்போது தெரிய வந்துள்ளது.

குறித்த தொழிற்சாலையின் மூன்று சேவையாளர்களுக்கு நேற்று தொற்றுறுதியாகியிருந்த நிலையில் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையில் மேலும் 11 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இந்தநிலையில் கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திலுள்ள 12 தொழிற்சாலைகளிலுள்ள ஆயிரத்து 325 பேருரிடம் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 7 ஆம் திகதி சுகயீனமான நிலையில் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதியான கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திலுள்ள பணியாளர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானமை குறிப்பிடத்தக்கது.