கடத்தப்பட்ட கப்பலில் இலங்கையர் ஒருவரும் உள்ளதாக தகவல்

கடத்தப்பட்ட கப்பலில் இலங்கையர் ஒருவரும் உள்ளதாக தகவல்

சோமாலியக் கடற்கரைக்கு அப்பால் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட எரிபொருள் தாங்கிக் கப்பலின் ஊழியர்களில் இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

17 பேரைக் கொண்ட அந்தக் கப்பல் ஊழியர் குழுவில் ஒரு இலங்கையர், 10 பாகிஸ்தானியர்கள், நான்கு இந்தோனேசியர்கள், ஒரு இந்தியர் மற்றும் மியான்மார் நாட்டு பிரஜை ஒருவர் அடங்குவதாக அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன.

18,500 பீப்பாய் எரிபொருளை ஏற்றிச் சென்ற குறித்த கப்பல், கடந்த புதன்கிழமை இரவு சோமாலியக் கடற்கரையிலிருந்து சுமார் 30 கடல் மைல் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்தபோது ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளது.

தற்போது அந்தக் கப்பலும் 17 ஊழியர்களும் கடற்கொள்ளையர்களின் கட்டுப்பாட்டில் சோமாலியக் கடற்கரைக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், சோமாலிய அதிகாரிகள் அல்லது சோமாலியக் கடல் பரப்பில் கடற்கொள்ளை ஒழிப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் ஐரோப்பிய கடற்படை இது குறித்து இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை.

இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவரைத் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களைப் பெற 'அத தெரண' மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது.