வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் - மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் - மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

கொரோனா தொற்று அச்சுறுத்தல் நிலவுகின்ற இக்காலத்தில் அநாவசியமாக வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச கொரோனா பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது மீண்டும் பரவியுள்ள கொவிட் 19 தாக்கத்தைத் தடுப்பதற்காக திருக்கோவில் பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் நேற்று முக்கிய கூட்டம் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்வருமாறு:

வெளியிடங்களிலிருந்து திருக்கோவில் பிரதேசத்திற்கு வருவோர் உடனடியாக கிராம சேவை அலுவலரிடம் பதிய வேண்டும்.

அதே போன்று ஞாயிறு சந்தை உள்ளிட்ட பல்வேறு தேவைகளின் நிமித்தம் இங்கு வரும் வாகனங்கள் அனைத்தும் பதியப்பட வேண்டும்.

பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியேறும் போது முகக்கவசம் அணிதல் அவசியம். மக்கள் கூட்டமாக நிற்பதைத் தவிர்த்தல் வேண்டும்.

வெளிச்சூழலில் இருந்து வீட்டுக்குச் சென்றவுடன் கைகளை சவர்க்காரம் அல்லது கையை சுத்த செய்யும் பதார்த்தங்களை இட்டு கழுவுதல் பிரதானமாகும்.

அதே போன்று அவசியம் இல்லாமல் வெளியில் வருவதை தடுத்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

அவசியமேற்படின் பொது இடங்களில் தொற்று நீக்கம் செய்யவும், அவசியமான உணவுப் பொருட்களை காலடிக்கு கொண்டு சென்று விநியோகம் செய்யவும் முப்படையினர், சுகாதார வைத்திய பணிமனையினர், பிரதேச சபையினர் தயார் நிலையிலிருக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

நிறைவேற்றப்பட்ட சகல தீர்மானங்களும் அந்தந்த பிரிவு ஆலய ஒலிபெருக்கி வாயிலாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.