
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 207 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 207 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்களில் 199 பேர் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்கள் என்பதுடன் மேலும் மூவர் தொழிற்சாலை தொழிலாளர்களின் உறவினர்கள் என்றும் அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேநேரம் ஏனைய ஐவரும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்றும் அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், மினுவங்கொடை ஆடை தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களில் இதுவரையில், ஆயிரத்து 34 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 459 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 3 ஆயிரத்து 274 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ள நிலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளான ஆயிரத்து 172 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் கொரோனா தொற்று சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலையில் 201 பேர் வைத்தியக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் இந்த தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இலங்கையில் இதுவரையில் 3 இலட்சத்துக்கும் மெற்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.