சீதுவ, கட்டான மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் 30 பேருக்கு கொரோனா..!

சீதுவ, கட்டான மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் 30 பேருக்கு கொரோனா..!

கட்டுநாயக்க பிரதேச வளாகத்தல் உள்ள சீதுவ, கட்டான மற்றும் நீர்கொழும்பு முதலான சுகாதார பிரிவுகளில், நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியான 30 பேர் வரையில் அடையாளம் காணப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த 22ம் திகதி இந்தியாவின் விசாகப்பட்டிணத்தில் இருந்து, ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் 60 ஊழியர்கள் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.

இது குறித்து விளக்கமளித்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ப்ரெண்டிக்ஸ் நிறுவனம், இந்தியாவில் உள்ள தங்களது நிறுவனத்தில் பணியாற்றிய இலங்கையர்களையும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் நாட்டுக்கு அழைத்து வருவவதற்காக, விசாகப்பட்டிணத்தில் இருந்து 3 விமான சேவைகள் இயக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

அவ்வாறு நாடுதிரும்பிய அனைவரும், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் கட்டாய தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர்கள் அனைவரும் பொது சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்பின்கீழ், மேலும் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டதாக ப்ரெண்டிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஈரான் பிரஜை ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானமை, நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த ஈரான் பிரஜை, உமா ஓயா திட்டத்தில் பணியாற்றியவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புங்குடுதீவில் கொவிட்-19 தொற்றுறுதியான மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய பெண், கடந்த 3ஆம், 4ஆம் திகதிகளில் பயணம் மேற்கொண்ட பேருந்துகளில் பயணித்தவர்கள் தங்களது விபரங்களை வடமாகாண சுகாதார சேவை திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகம், அறிக்கை ஒன்றின் மூலம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

இதற்கமைய, 0212 22 66 66 என்ற இலக்கத்தை தொடர்புகொண்டு சம்பந்தப்பட்டவர்கள் தகவல் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.