
மேல் மாகாணம் முடக்கப்படுமா? – ஜனாதிபதியின் பேச்சாளர்
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மேல் மாகாணத்தை முடக்கப்போவதில்லை என ஜனாதிபதியின் பேச்சாளர் மொகான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும் மேல்மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து, கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று மாலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரும்வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்தின் சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் தேசப்பந்து தென்னக்கோன் அறிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட திவுலபிட்டிய, மினுவங்கொட மற்றும் வெயங்கொட பகுதிகளில் ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மேல் மாகாணத்திலும் முடக்கம் அல்லது ஊரடங்கு அறிவிக்கப்படுமா என்பது குறித்து மக்களிடையே கேள்வி எழுந்துள்ள நிலையில், ஜனாதிபதியின் பேச்சாளர் மொகான் சமரநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாடளாவிய ரீதியில் முடக்கல் நிலையை அறிவிக்கப்போவதில்லை என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஏற்கனவே தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.