திவுலுபிட்டியவில் 1400 பேருக்கு PCR பரிசோதனை – 156 பேரின் முடிவுகள் இன்று!
திவுலுபிட்டிய பகுதியில் தனிமைப்படுத்தலில் உள்ள 156 பேரின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று கிடைக்கப்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் 6 பேர் மற்றும் 150 தொழிற்சாலை ஊழியர்களின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளே இன்று கிடைக்கப்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பெண்ணின் தொழிற்சாலை ஊழியர்கள் 1400 பேரிற்கு அதிகமானவர்களுக்கு இன்று பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திவுலுபிட்டிய பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை நேற்று கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, அவருடைய குடும்பத்தினர் மற்றும் அவர் பணியாற்றிய தொழிற்சாலையின் ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அதற்கமைய குறித்த பெண்ணின் தொழிற்சாலை ஊழியர்கள் 400 இற்கும் அதிகமானவர்கள் வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதேநேரம், மினுவாங்கொடை மற்றும் திவுலபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள கிராம சேவகர் பிரிவுகளுக்கு மறுஅறிவிப்பு வரும் வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து, அவருடைய மகளும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெயாங்கொடை பகுதிக்கும் மறுஅறிவித்தல்வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.