கம்பஹா - திவுலுபிட்டிய பகுதியில் 39 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்றுறுதியானது எவ்வாறு..?(காணொளி)

கம்பஹா - திவுலுபிட்டிய பகுதியில் 39 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்றுறுதியானது எவ்வாறு..?(காணொளி)

கம்பஹா - திவுலுபிட்டிய பகுதியில் கொவிட் 19 தொற்றுறுதியான பெண்ணின் 16 வயதுடைய மகளுக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இன்று மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையில் அவருக்கும் கொவிட் 19 தொற்றுதி செய்யப்பட்டுள்ளது என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்ர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் ஹம்பராதுவ தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள அவரை ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கம்பஹா பகுதியில் எவரேனுக்கும் காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று பீ.சீ.ஆர் பரிசோதனையினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பதில் சுகாதார பணிப்பாளர் நாயகம், மருத்துவ நிபுணர் எஸ்.ஸ்ரீதரன் இதனை தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் தொற்றுறுதியான பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இதற்கமைய திவுலபிட்டிய பகுதியில் 180 பேருக்கு மேற்பட்டோரும் மினுவாங்கொடயில் 250 பேரும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என பொது சுகாதார பரிசோதகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த பெண் பணிபுரிந்த ஆடை தொழிற்சாலையில் நாளைய தினம் ஆயிரத்து 600 பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பெண் காய்ச்சல் காரணமாக கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிகிச்சையின் பின்னர் அவர் வெளியேறும் போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளின் மூலம் கொவிட் 19 தொற்றுறுதியானமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனையின் பணியாளர்கள் 15 பேரும், சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த பெண்ணுக்கு எவ்வாறு கொவிட் 19 தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது.

அவருடன் தொடர்பை பேணியவர்களிடத்தில் மேற்கொள்ளப்படும் பீ.சி.ஆர் பரிசோதனைகளது முடிவுகளின் பின்னர் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் குறித்த ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு யுவதிகள் உள்ளிட்ட 23 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.