விண்வெளிக்கு பறக்கும் திராட்சை விதைகள்: 'ஸ்பெஷல் ஒயின்' தயாரிக்க விஞ்ஞானிகள் பிளான்; விவசாயத்தில் புரட்சி
டெக்சாஸைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான திராட்சை விதைகள், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 6 மாத காலப் பயணமாக அனுப்பப்பட உள்ளன. ‘TAMU-SPIRIT’ என்ற விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த விசித்திரப் பரிசோதனை நடத்தப்படுகிறது.
விவசாயத் துறையில் விசித்திரமான மற்றும் மிரட்டலான புரட்சிக்கு வித்திடப் போகிறது புதிய ஆராய்ச்சி. அமெரிக்காவின் டெக்சாஸ் (Texas) மாகாணத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான திராட்சை விதைகள், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (International Space Station) 6 மாத காலப் பயணமாக விண்கலம் மூலம் அனுப்பப்பட உள்ளன. விண்வெளியில் இருக்கும் பிரபஞ்சக் கதிர்வீச்சுகளுக்கு (Cosmic radiation) மத்தியில் இந்த விதைகள் 6 மாதங்கள் தங்கியிருக்கும். அதன் பிறகு மீண்டும் பூமிக்குக் கொண்டு வரப்பட்டு, மண்ணில் விதைக்கப்படும்.
விண்வெளிச் சூழல் இந்த திராட்சை விதைகளில் என்னென்ன வித்தைகளைக் காட்டியிருக்கிறது? என்பதை ஆராய விஞ்ஞானிகள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். பல சுவாரசியமான அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக, விண்வெளியில் ஒரு 'செயற்கைக்கோள் வளாகம்' போல வடிவமைக்கப்பட்டுள்ள 'TAMU-SPIRIT' என்ற விண்வெளித் திட்டத்தின் கீழ் இந்த விசித்திரப் பரிசோதனை நடத்தப்படுகிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
பூமியின் வளிமண்டலப் பாதுகாப்பைத் தாண்டி திராட்சை விதைகள் விண்வெளிக்குச் சென்றவுடன், அங்கு பாயும் கடுமையான கதிர்வீச்சுகள் விதைகளின் மரபணுக்களில் சில மாற்றங்களை தூண்டிவிடும். விண்வெளியின் மிகக் கடுமையான சூழல், பயிர்களை நோய்களைத் தாங்கி வளரக்கூடிய மற்றும் எந்தச் சூழலையும் எளிதில் மாற்றியமைத்துக் கொள்ளும் அசாத்தியத் திறன் கொண்டவையாக மாற்றுமா? என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஆய்வு உதவும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இதன் மூலம் பூமியிலும் சரி, எதிர்காலத்தில் மனிதர்கள் மேற்கொள்ளும் விண்வெளிப் பயணங்களின் போதும் சரி, விவசாயத்தில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்த முடியும்.
விண்வெளி கதிர்வீச்சு திராட்சை விதைகளை முழுமையாகச் சேதப்படுத்தினாலோ அல்லது அவை முளைக்கும் திறனை இழந்தாலோ பரிசோதனை பாழாகிவிடும் அல்லவா? இதற்காக, இந்த ஆராய்ச்சிப் பிரிவைச் சேர்ந்த கோபி அர்னால்டு-அரவிந்த் சுப்ரமணியம் ஆகியோர் பிரத்யேகப் பாதுகாப்புக் கொள்கலனை உருவாக்கியுள்ளனர். விதைகளைப் பாதுகாப்பதோடு, விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்குத் தேவையான அளவிலான கதிர்வீச்சு மட்டும் விதைகளின் மீது கட்டுப்படுத்தப்பட்ட முறையில் படுவதையும் உறுதி செய்கிறது.
6 மாத பயணத்தை முடித்துக் கொண்டு இந்த விதைகள் பூமிக்குத் திரும்பியதும், அவை டெக்சாஸ் ஏ&எம் (Texas A&M) பல்கலைக்கழகத்தின் 'தாமஸ் ரான்ச்' (Thomas Ranch) திராட்சைத் தோட்டத்தில் பயிரிடப்படும். அதே நேரத்தில், விண்வெளிக்கே செல்லாமல் பூமியிலேயே பத்திரமாக வைக்கப்பட்டிருந்த அதே வகையான சாதாரண திராட்சை விதைகளும் இதன் அருகிலேயே பயிரிடப்படும். இப்போது 2 குழுக்களாக வளரும் இந்தத் தாவரங்களை விஞ்ஞானிகள் அக்குவேறு ஆணிவேறாக ஒப்பிட்டு ஆராய்வார்கள். தாவரங்கள் எவ்வளவு வேகமாக வளர்கின்றன? (Growth), திராட்சைக் கொடிகளின் தரம் எப்படி இருக்கிறது? (Vine performance), ஒயின் (Wine) தயாரிப்பதற்கான திராட்சையின் தரம் எப்படி உள்ளது? (Wine grape performance), இரண்டின் மரபணுக்களில் என்னென்ன மாற்றங்கள் நடந்துள்ளன? (Genetics)
பல்வேறு அளவிலான கதிர்வீச்சுகள் இந்த விதைகளின் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன மற்றும் அவை வளர்ந்த பிறகு அவற்றின் மரபணு வெளிப்பாடு (Genetic expression) எவ்வாறு மாறுகிறது என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஆராய்ச்சி உதவும் என்கிறார் டெக்சாஸ் ஏ&எம் பல்கலை. திராட்சை பயிரிடல் நிபுணர் ஜஸ்டின் ஷீனர். மேலும், இன்னும் சில ஆண்டுகளில் விண்வெளிக்குச் சென்று வந்த விதைகளில் இருந்து உருவான திராட்சையைக் கொண்டு, நாம் 'ஒயின்' பாட்டில்களைத் தயாரிக்கப் போகிறோம் என்ற ஒரு சுவாரசியமான புதுமையும் இதில் ஒளிந்துள்ளது என்று அவர் ஆவலுடன் பகிர்ந்துள்ளார்.
இந்த விண்வெளிப் பயணத்திற்காக 3 முக்கியத் திராட்சை வகைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. டெக்சாஸ் திராட்சைத் தோட்டங்களின் மண், நீர் நிலைகளுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றியமைத்துக் கொள்ளும் திறன் மற்றும் நோய்களை எதிர்க்கும் குணம் கொண்டிருப்பதால் இவை தேர்வு செய்யப்பட்டன. அதில் மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க வகைதான் 'லோமண்டோ' (Lomanto). இது 1902-ல் டெக்சாஸின் முன்னோடி திராட்சை வளர்ப்பு நிபுணரான டி.வி. முன்சன் என்பவரால் உருவாக்கப்பட்டது. வறட்சி, நோய்களைத் தாங்கி வளரக்கூடிய இந்தத் திராட்சை வகை, 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பிய திராட்சைத் தோட்டங்களை முற்றிலும் அழித்த 'ஃபிலோக்செரா' (Phylloxera) என்னும் பூச்சித் தாக்குதல் நெருக்கடியை முறியடிப்பதில் முக்கியப் பங்கு வகித்தது. அன்று உலகைக் காத்த இந்தத் திராட்சைக் கொடி, இன்று விண்வெளிக்குச் செல்வதை ஒரு வட்டம் முழுமையடைந்தது போன்ற வரலாற்றுத் தருணம் என்று ஜஸ்டின் ஷீனர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.