பொது இடங்களில் குத்தவைத்து அமரும் சீனர்கள்: ஏன் தெரியுமா? பின்னணியில் உள்ள அறிவியல் காரணம்!
உலகளவில் 'ஏசியன் ஸ்குவாட்' என்று அழைக்கப்படும் இந்த உட்காரும் முறையை, சீனப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சிறு வயதிலிருந்தே பழக்கமாகக் கற்றுக் கொடுக்கிறார்கள்.
சீனாவில் பொது இடங்களான பேருந்து நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்கள் (Malls) என எங்குச் சென்றாலும், அங்குள்ள மக்கள் ஒரு குறிப்பிட்ட பாணியில் குந்தவைத்துப் (குத்தவைத்து) உட்கார்ந்திருப்பதை பரவலாகக் காண முடிகிறது. நம்மூரில் நாற்காலிகள் இருக்கும்போது யாராவது இப்படி அமர்ந்திருந்தால், அதனை நாகரிகமற்ற செயலாகக் கருதி கேலி செய்யும் வழக்கம் உண்டு. ஆனால், சீனாவில் இது மிகவும் சாதாரணமான ஒரு பொதுவான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. சீன மக்களின் இந்த விசித்திரமான உட்காரும் முறைக்கு பின்னால் ஆச்சரியமளிக்கும் சில ஆரோக்கியக் காரணங்கள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
'ஏசியன் ஸ்குவாட்' (Asian Squat)
இந்தத் தனித்துவமான உட்காரும் முறைக்கு உலகளவில் 'ஏசியன் ஸ்குவாட்' என்று பெயரிடப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்குச் சிறு வயதிலேயே, வெளியில் அழைத்துச் செல்லும்போது இந்த முறையில் உட்காரும் பழக்கத்தை ஒரு பயிற்சியாகவே கற்றுக் கொடுக்கிறார்கள்.
பின்னணியில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள்
விஞ்ஞான ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் இந்த முறையில் அமர்வதால் உடலுக்குப் பல்வேறு நன்மைகள் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் (Position) அமரும்போது, உடலின் கீழ் முதுகுப் பகுதியில் (Lower back) ஏற்படும் தேவையற்ற அழுத்தம் பெருமளவு குறைகிறது. உடலின் மொத்த எடையும் கால்களுக்கு மட்டுமே முழுமையான அழுத்தத்தைக் கொடுக்காதவாறு இந்த உடல் நிலை சமன் செய்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த 'ஏசியன் ஸ்குவாட்' நிலையில் அமர்வது நாம் சாப்பிட்ட உணவைச் மிக விரைவாகவும் எளிதாகவும் செரிமானம் (Digestion) அடையச் செய்ய உதவுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. மேற்கத்திய கலாச்சார நாற்காலிப் பழக்கவழக்கங்களுக்கு மத்தியில், சீன மக்கள் தங்களின் பாரம்பரியமான இந்த உட்காரும் முறையை ஆரோக்கியக் காரணங்களுக்காக இன்றும் தொடர்ந்து பின்பற்றி வருவது உலகளவில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.