8 கி.மீ உயரத்திற்கு எழுந்த தூசிப் புயல்: செவ்வாயில் 158 கி.மீ/மணி வேகத்தில் புயல் சுழன்றடித்த காட்சிகள்!
செவ்வாய் கிரகத்தில் உள்ள 'மேமர்ஸ் வாலிஸ்' (Mamers Valles) என்ற பிரமாண்ட பள்ளத்தாக்கு பகுதியில், டஜன் கணக்கிலான ராட்சத தூசிப் புயல்கள் சுழன்றடிக்கும் விசித்திரமான மற்றும் ஆச்சரியமூட்டும் புகைப்படங்களை ஐரோப்பிய விண்வெளி முகமை (ESA) பகிர்ந்துள்ளது.
கடந்த 2003-ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டு, செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பைத் தொடர்ந்து ஆய்வு செய்து வரும் 'மார்ஸ் எக்ஸ்பிரஸ்' (Mars Express) விண்கலம்தான் இந்தப் புகைப் படங்களைப் படம் பிடித்து அனுப்பியுள்ளது. விண்வெளி விஞ்ஞானிகள் கணித்ததை விட, அங்கு மிகக் கடுமையான மற்றும் அதிவேகமான காற்று வீசி வருவதை இந்தப் படங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
செவ்வாயில் 'தூசிப் புயல்' எப்படி உருவாகிறது?
ஐரோப்பிய விண்வெளி முகமையின் (ESA) விளக்கப்படி, சூரிய வெப்பத்தால் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு சூடாகும் போது, அதற்குச் சற்று மேலே உள்ள காற்று வேகமாக மேல்நோக்கிச் சுழன்று எழும்புகிறது. இந்தச் சுழல் காற்று, அங்குள்ள தூசிகளையும் தன்னோடு சேர்த்து மேலே இழுத்துச் செல்வதால் தான் இத்தகைய தூசிப் புயல்கள் உருவாகின்றன. பூமியில் உள்ள வறண்ட, பாலைவனப் பகுதிகளில் நாம் பார்க்கும் சுழல் காற்றைப் போன்றதே செவ்வாயின் இந்தத் தூசிப் புயல்களும். ஆனால், அளவிலும் வேகத்திலும் இவை பூமியை விடப் பல மடங்கு பெரியவை. இவை சுமார் 8 கிலோமீட்டர் உயரம் வரை பிரமாண்டமாக எழும்பி, பல கிலோமீட்டர் தூரத்திற்கு பயணிக்கும் திறன் கொண்டவை. மேலும், இவை வினாடிக்கு 45 மீட்டர் (மணிக்கு சுமார் 162 கி.மீ) வேகத்தில் சுழன்றடிக்கின்றன என்று ஐரோப்பிய விண்வெளி முகமை தெரிவித்துள்ளது.
மணிக்கு 158 கி.மீ வேகம்
மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலத்தில் உள்ள 8 அதிநவீன கருவிகளில் ஒன்றான 'ஹை ரெசல்யூஷன் ஸ்டீரியோ கேமரா' (HRSC) மூலமாக இந்தப் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தப் படங்களில், 30-க்கும் மேற்பட்ட தூசிப் புயல்கள் தீவிரமாகச் சுழன்று கொண்டிருப்பது பதிவாகியுள்ளது. அவை சிறிய மஞ்சள் நிறப் புள்ளிகளாகவும், அவற்றின் பின்னால் இளஞ்சிவப்பு நிற நிழல் போன்ற கோடுகளுடனும் காட்சியளிக்கின்றன. இதற்கு முன்னதாக செவ்வாயின் தரைப்பகுதியில் ஆய்வு செய்த ரோவர்கள் (Rovers) பதிவு செய்ததை விட, இந்தத் தூசிப் புயல்களின் வேகம் மிக அதிகம் (மணிக்கு 158 கிலோமீட்டர் அல்லது 98 மைல் வேகம்) என்று விஞ்ஞானிகள் தற்போது கணக்கிட்டுள்ளனர்.
'மேமர்ஸ் வாலிஸ்' பள்ளத்தாக்கின் பின்னணி
செவ்வாய் கிரகத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நீண்ட, வளைந்து நெளிந்து செல்லும் பிரம்மாண்ட பள்ளத்தாக்குத் தொடரே 'மேமர்ஸ் வாலிஸ்' (Mamers Valles) ஆகும். சுமார் 1,000 கிலோமீட்டர் (600 மைல்) நீளம் கொண்ட இந்த இப்பகுதி, செவ்வாய் கிரகத்தின் வரலாற்றில் மிக முக்கிய காலகட்டமான, சுமார் 3.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய 'லேட் நோச்சியன்' (Late Noachian) காலகட்டத்தைச் சேர்ந்ததாகும். மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலம் இப்பகுதிக்கு வருவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக 2008-ஆம் ஆண்டில் மேமர்ஸ் வாலிஸ் பகுதியையும், 2019-ல் அதன் அருகில் உள்ள 'டியூட்டெரோனிலஸ் மென்சே' (Deuteronilus Mensae) பகுதியையும் இந்த விண்கலம் விரிவாகப் படம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.