காஷ்மீரின் சொர்க்கம் அழிகிறதா? சோனாமார்க் 'தாஜிவாஸ் பனியாறு' 95% உருகி மறைந்ததாக அதிர்ச்சி ஆய்வு!

காஷ்மீரின் சொர்க்கம் அழிகிறதா? சோனாமார்க் 'தாஜிவாஸ் பனியாறு' 95% உருகி மறைந்ததாக அதிர்ச்சி ஆய்வு!

காஷ்மீரின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகவும், சோனாமார்க்கின் அடையாளமாகவும் திகழும் 'தாஜிவாஸ் பனியாறு' வேகமாக மறைந்து வருகிறது. கடந்த பனி யுகத்திற்குப் பிறகு, இதன் ஒட்டுமொத்த பனிப்பரப்பில் சுமார் 95% உருகிவிட்டதாக புதிய அறிவியல் ஆய்வு எச்சரித்துள்ளது.

காஷ்மீரின் மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும், சோனாமார்க்கின் கோடைகால அழகின் அடையாளமாகவும் திகழும் 'தாஜிவாஸ் பனியாறு' (Thajiwas Glacier) மிக வேகமாக அழிந்து வருகிறது. கடந்த பனி யுகத்திற்குப் பிறகு, இந்த பனியாற்றின் ஒட்டுமொத்த பனிப்பரப்பில் சுமார் 95% வரை உருகி மறைந்துவிட்டதாக புதிய அறிவியல் ஆய்வு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

காஷ்மீர் பல்கலை. மற்றும் புது டெல்லியில் உள்ள 'இன்டர்-யுனிவர்சிட்டி ஆக்சிலரேட்டர் சென்டர்' (IUAC) ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். காஷ்மீர் இமயமலையில் உள்ள தாஜிவாஸ் பனியாற்றின் பழங்கால மறுவடிவமைப்பு (Paleo-glacial Reconstruction of the Thajiwas Glacier in the Kashmir Himalaya) என்ற தலைப்பிலான இந்த ஆய்வறிக்கையில், ஒரு காலத்தில் சுமார் 54 சதுர கி.மீ. பரப்பளவில் பிரமாண்டமாக விரிந்து கிடந்த இந்த பனியாறு, தற்போது வெறும் 2.5 சதுர கிலோமீட்டராக சுருங்கி விட்டதாக கூறப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் இதனை பிரமாண்ட பனியாற்றின் எஞ்சியிருக்கும் சிறிய எச்சம் என்று விவரித்துள்ளனர்.

சோனாமார்க்கில் மாறிய கோடைகாலக் காட்சி

ஜம்மு-காஷ்மீரின் காந்தர்பல் (Ganderbal) மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மலைப்பிரதேசமான சோனாமார்க்கிற்கு இந்த ஆய்வு முடிவு கடும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது. இந்த கோடைகாலத்தில் வரும் சுற்றுலாப் பயணிகளை பரந்த பனிப்புலங்கள் வரவேற்பதற்குப் பதிலாக, காய்ந்த புல்வெளிகளும், ஆங்காங்கே பச்சைப்புற்களும், பனி உருகி வெளியே தெரிந்த பழுப்பு நிற மண்ணும்தான் வரவேற்கின்றன. தூரத்தில் உள்ள இமயமலைச் சிகரங்கள் இன்னும் பனியுடன் மின்னினாலும், இந்தப்பகுதியின் அழகை வரையறுத்த முதன்மை பனியாறு பெருமளவில் மறைந்துவிட்டது.

வெப்பமயமாதலால் இமயமலைப் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் வெப்பநிலை, குளிர்காலத்தில் பனிப்பொழிவு குறைந்து வருவது, 'கார்பன் மாசு' மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக மிக உணர்திறன் வாய்ந்த இப்பகுதியில் அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் அழுத்தம் ஆகியவையே இந்த அதிவேகப் பனி உருகுதலுக்கு முக்கியக் காரணங்கள் என்று விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். சுற்றுச்சூழல் புவியியலாளர் மாசூன் பெய்க் இதுகுறித்து எச்சரிக்கையில், பனியாற்றின் வெறும் 5 முதல் 7% பரப்பு மட்டுமே இப்போது எஞ்சியுள்ளது. இது ஒரு மாபெரும் பேரழிவிற்கு இணையானது என்று கூறியுள்ளார். மேலும், இந்த பனி உருகுதல் இப்பகுதியின் விவசாயம், தோட்டக்கலை மற்றும் நீர்மின் உற்பத்தி (Hydropower generation) ஆகியவற்றைப் கடுமையாகப் பாதிக்கலாம் என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

உருவாகும் கடுமையான தண்ணீர் பஞ்சம்

தாஜிவாஸ் பனியாறு என்பது அப்பகுதியில் பாய்ந்து வரும் 'சிந்து நதிக்கு' உருகிய பனிநீரை வழங்கும் மிக முக்கியமான ஆதாரமாகும். எனவே, இதன்அழிவு சுற்றுலாத்துறை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பிராந்தியத்தின் தண்ணீர் பாதுகாப்பு மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் பனியாறுகளைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் அவசரக் கட்டுப்பாட்டு வழிமுறைகளை (Swiss-style glacier protection measures) இங்கும் உடனே கொண்டு வர வேண்டும் என்று நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்காக சில முக்கிய நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளனர். மாசு மற்றும் வாகனப் புகையைக் கட்டுப்படுத்துதல், சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஒழுங்குபடுத்துதல், குதிரைகள் (Pony traffic) செல்லும் பாதைகளை மாற்றி அமைத்தல், கார்பன் படிவுகளைக் குறைத்தல் மற்றும் மைக்ரோபிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாகத் தடை செய்தல் (Zero-microplastic policies) இதனுடன், பசுமைக்குடில் வாயு உமிழ்வை (Greenhouse gas emissions) குறைப்பதற்கான உலகளாவிய காலநிலை நடவடிக்கைகளின் அவசியத்தையும் விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.

மாறும் நினைவுகளும்... மறையும் பனியாறும்..!

பல சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த பனியாற்றின் மறைவு தனிப்பட்ட முறையில் ஒரு சோகமான விஷயமாக மாறியுள்ளது. டெல்லி பகுதியைச் சேர்ந்த 21 வயதான பைதுர்ஜியோ குண்டு (Baidurjyo Kundu) என்பவர், தான் 2012-ல் 7 வயதுச் சிறுவனாக முதன்முதலில் இங்கு வந்து பனியைத் தொட்டுப் பார்த்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். என் நண்பர்களுடன் மீண்டும் இங்கு வந்து புதிய நினைவுகளை உருவாக்க வேண்டும் என்று எப்போதும் ஆசைப்பட்டேன். ஆனால், நான் அன்று பார்த்த அதே பழைய பனியாற்றை இனி என் வாழ்க்கையில் எப்போதும் பார்க்க முடியாது என்பதுதான் மிக வருத்தமளிக்கிறது என்று அவர் கூறினார். தாஜிவாஸ் பனியாறு மெல்ல மெல்ல வரலாறாக மறைந்து வரும் இந்தச் சூழல், இமயமலையின் பலவீனமான சுற்றுச்சூழல் அமைப்பில் காலநிலை மாற்றம் (Climate Change) ஏற்படுத்தி வரும் அதிவேகப் பாதிப்பின் ஒரு நிஜமான சாட்சியாக நின்றுகொண்டிருக்கிறது.