விசாரணை நிறைவு: ஆர்யன் கான் ஜாமீன் மனு மீது 20-ந்தேதி தீர்ப்பு

விசாரணை நிறைவு: ஆர்யன் கான் ஜாமீன் மனு மீது 20-ந்தேதி தீர்ப்பு

சொகுசு கப்பல் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்யன் கான் ஜாமீன் மனு மீது வருகிற 20-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என மும்பை கோர்ட் தெரிவித்துள்ளது.

 

மும்பையில் இருந்து கோவாவிற்கு சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கலந்து கொண்டது தெரியவந்தது. பொதைப்பொருள் பயன்படுத்தியதாக அவருடன் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

பின்னர் நான்கு நாட்கள் தேசிய போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதன்பிறகு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மூன்று முறை ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதால் சிறையில் இருந்து வெளியில் வர முடியாமல் உள்ளார்.

 

 

 

 

இந்த நிலையில் ஆர்யன் கான் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மும்பை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியது, விற்பனை செய்த வேலைகளில் ஈடுபட்டுள்ளார் என தேசிய பொதைப்பொருள் தடுப்புப்பிரிவு சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

 

ஆர்யன்கான் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், கப்பலில் சோதனை நடத்தியபோது ஆர்யன் கான் சம்பவ இடத்தில் இல்லை, போதைப்பொருள் வாங்குவதற்கான பணம் அவரிடம் இல்லை. அவரிடம் போதைப்பொருள் இல்லை எனக்குறிப்பிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் மனு மீதான விசாரணையை இன்றும் நடைபெறும் எனத் தெரிவித்தது.

 

அதன்பின் இன்று காலை ஆர்யன் கான் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது. இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் 20-ந்தேதி ஜாமீன் குறித்து முடிவு எடுக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

இதனால் 20-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராக்கப்படும் வரை ஆர்யன் கான் சிறையில் அடைக்கப்படுகிறார்.