தலைக்கவச பிரச்சனையால் பெண் ஒருவர் அடித்து கொலை

தலைக்கவச பிரச்சனையால் பெண் ஒருவர் அடித்து கொலை

மட்டக்களப்பு, ஆயித்தியமலையில் கசிப்பு வாங்கச் சென்றவரின் தலைகவசம் காணாமல் போன பிரச்சினை ஒன்றில் குடும்ப பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று (26) நள்ளிரவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆயித்தியமலை உன்னிச்சை வீதியைச் சேர்ந்த 49 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான புஸ்பராசா தேவகி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை குறித்த பெண்ணின் வீட்டிற்கு அதே பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணின் உறவினர்களான இருவர் மோட்டர் சைக்கிளில் சென்று அதனை நிறுத்திவிட்டு அதில் தலைகவசத்தை வைத்துவிட்டு கசிப்பு வாங்க சென்றுள்ள நிலையில் கசிப்பு இல்லை என்பதால் திரும்பியபோது மோட்டர் சைக்கிளில் இருந்த தலைகசம் காணாமல் போயுள்ளது

இந்த நிலையில் கசிப்பு வாங்கச் சென்றவருக்கும் குறித்த பெண்ணுக்குமிடையே வாய்தர்கம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர்கள் திரும்பிச் சென்றபோது அவர்களை வழிமறித்து அவர்கள்மீது குறித்த பெண்ணின் மகனார் தாக்குதல் நடாத்தியுள்ளார்.

இதனையடுத்து கசிப்பு வாங்க சென்று தாக்குதலுக்கு இலக்கானவர் மகனுடன் பொலிஸ் நிலையத்துக்கு சென்று தலைகவசம் காணாமல் போனது மற்றும் தாக்குதல் நடாத்தியது தொடர்பாக முறைப்பாடு செய்துவிட்டு இரவு 12.30 மணியவில் உயிரிழந்த பெண்ணின் வீட்டிற்கு தந்தையும் மகனும் சென்று குறித்த பெண்மீது கம்பியால் தாக்குதல் மேற்கொண்டதையடுத்து படுகாயமடைந்த குறித்த பெண் செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.

இதேவேளை தாக்குதல் நடாத்திய இருவர் மீது பெண்ணின் உறுவினர்கள் கத்திகுத்து தாக்குதல் நடாத்தியதில் 60 வயதுடையவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்டுள்ளதாகவும் இரு குடும்பங்களுக்குமிடையே நீண்டகாலமாக சண்டை இடம்பெற்றுவந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இச் சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலம் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக தடவியல் பிரிவினர் அழைக்கப்பட்டு ஆயித்தியமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-