யாழ்.மாநகர சபையால் உருவாக்கப்பட்ட காவல் படை- சபை அமர்வை புறக்கணித்த ஈ.பி.டி.பி!

யாழ்.மாநகர சபையால் உருவாக்கப்பட்ட காவல் படை- சபை அமர்வை புறக்கணித்த ஈ.பி.டி.பி!

யாழ். மாநகர சபையின் இன்றைய அமர்வுகளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி புறக்கணித்துள்ளது என்று மாநகர சபை உறுப்பினரும் முன்னாள் முதல்வருமான திருமதி. யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபை முதல்வரினால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாநகர காவல் படை தொடர்பில் தம்முடன் கலந்துரையாடப்படாமையே இன்றைய புறக்கணிப்பிற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியலில் ஆர்வம் செலுத்துகின்ற இளைய தலைமுறையினருக்கு சந்தர்ப்பத்தினை வழங்க வேண்டும் என்பதற்காக சட்டத்தரணி மணிவண்ணனுக்கு ஆதரவு வழங்குவதற்கு எமது கட்சியின் தலைமை தீர்மானித்திருந்தது.

எவ்வாறெனினும், எமது கட்சியின் ஆதரவுடன் ஆதிகாரத்தைப் பெற்றுக்கொண்டவர்கள், முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளும் போது அவை தொடர்பாக எம்முடனும் கலந்துரையாட வேண்டியது தார்மீக கடமையாகும்.

ஆனால் காவல்படை உருவாக்கம் தொடர்பாக எம்மோடு கலந்துரையாடப்படவில்லை. இதுதொடர்பில் எமது கரிசனையை வெளிப்படுத்தும் வகையிலேயே இன்றைய அமர்வுகளை புறக்கணித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.