விசாரணைகளின் முடிவில் மஹிந்தானந்தவின் குற்றச்சாட்டுக்கள் குறித்த உண்மைகள் வெளிவரும் – சங்கக்கார

விசாரணைகளின் முடிவில் மஹிந்தானந்தவின் குற்றச்சாட்டுக்கள் குறித்த உண்மைகள் வெளிவரும் – சங்கக்கார

விசாரணைகளின் முடிவில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமேயின்  குற்றச்சாட்டுக்கள் குறித்த உண்மைகள் வெளிவரும் என இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

2011 உலகக்கிண்ண இறுதி கிரிக்கெட் போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றுள்ளதென முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் பகிரங்கமான குற்றஞ்சாட்டினையடுத்து விளையாட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பிலான பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு தொடர் வாக்குமூலங்களை முன்னெடுத்து வருகின்றது.

விளையாட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பிலான பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவிற்கு நேற்று அழைக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, சுமார் 09 மணிநேரம் வாக்குமூலம் வழங்கினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தபோதே, அவர் மேறகுறிப்பிட்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், விசாரணைகள் முடிவடைந்ததும் முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமேயின் குற்றச்சாட்டுகள் மீதான உண்மைகளை அனைவரும் அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும் என தான் நம்புவதாக தெரிவித்தார்.

இதன்போது ஐ.சி.சி தலைவர் பதவிக்கு தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சங்கக்கார, இல்லை, அப்பதவிக்கு அவ்வாறு அழைப்பு விடுக்கப்படுவதில்லை, அதற்கு வேறு விதமான நடைமுறைகள் உள்ளன, எனினும் தற்போது நான் ஐ.சி.சி தலைவர்பதவி குறித்து சிந்திக்கவில்லை அதனைவிட முக்கியமான வேறு ஒரு விடயம் எனக்கு உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், உங்களுக்கு ஐ.சி.சி தலைவர்பதவி கிடைத்தால் ஏற்றுக்கொள்வீர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இல்லை, எதனையும் செய்வதற்கு எனக்கு அதிக காலம் இல்லை. முதலில் எனக்கு இருக்கும் முக்கிய பொறுப்புகளை நான் சரியாக நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார.

இதேவேளை, இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் உபுல் தரங்க நேற்று முன்தினம் விளையாட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பிலான பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவில் 3 மணிநேரம், சாட்சியமளித்திருந்த அதேவேளை இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் முன்னாள் தலைவர் அரவிந்த டி சில்வா, மேற்படி குற்றச்சாட்டுகள் தொடர்பில், கடந்த 30ம் திகதி சாட்சியம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.