மது அருந்திவிட்டு நீராடச் சென்ற இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்
பலுகமுவ-கல்கிஸ்ஸ வாய்க்கால் ஒன்றில் நீராடச் சென்ற 22 வயது இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று (14) பிற்பகல் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு, சம்பவத்தில் உயிரிழந்த நபர் உடுபத்தாவ பிரதேசத்தில் வசித்து வந்த நிமந்த மதுஷங்க என்பவராவர்.
பாடசாலை நண்பர்கள் மூவருடன் நீராடுவதற்காக குறித்த வாய்க்காலுக்கு வந்துள்ளதோடு, அங்கு நண்பர்களுடன் மது அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மது அருந்திய பின்னர் உயிரிழந்த நபரும் மற்றைய ஒருவரும் நீராடுவதற்காக குறித்த வாய்க்காலுக்குள் இறங்கியுள்ளனர். இதனையடுத்து குறித்த இருவரும் நீரில் மூழ்கிவிட்டனர்.
இதன்போது விரைந்து செயற்பட்ட கரையில் இருந்த இருவரால், அதில் ஒருவரை மாத்திரமே காப்பாற்ற முடிந்துள்ளது. பின்னர் நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞனின் சடலம் சுமார் 10 அடி ஆழத்தில் இருந்து மீட்கப்பட்டதாக பிரதேசத்துக்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.
இந்நிலையில், குறித்த பகுதியில் ஏற்கனவே 13 பேர் நீரில் மூழ்கி மரணித்துள்ளதோடு, குறித்த பகுதியிக்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் பெரும்பாலான இளைஞர்கள் வருகைத் தந்து மதுபானம் அருந்திவிட்டு நீராடுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.